‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ சினிமா விமர்சனம்

0
335

பவன் கல்யாண், சமந்தா நடிப்பில் ஐந்தாறு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியான ‘அத்தாரிண்டிகி தாரேதி (அத்தை வீட்டுக்கு வழியென்ன?)’ என்ற படத்தின் ரீ மேக்.

பல நாடுகளில் பிஸினஸ், பத்தாயிரம் பணியாளர்கள், பல லட்சம் கோடிக்கு அதிபதி என ராஜவாழ்க்கை வாழ்பவர் நாசர். ஸ்பெயினில் வசிக்கும் அவரது மனசு முழுக்க பெயின்!

காரணம்? ஓப்பன் த பிளாஷ்பேக்…

மகள் ரம்யாகிருஷ்ணன் தன் அந்தஸ்தை ஒப்பிடும்போது பாதாளத்தில் கிடக்கிற வழக்கறிஞர் பிரபுவைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டதால் துப்பாக்கியால் தண்டித்துத் துரத்துகிறார் நாசர். துரத்தப்பட்ட ரம்யாகிருஷ்ணன் – பிரபு தம்பதி தமிழ்நாட்டுக்கு வந்து, இரண்டு பெண்களுக்கு அப்பா அம்மாவாகி, சம்பாதித்து அந்தஸ்தில் உயர்கிறார்கள்.

பல்லெல்லாம் உதிர்ந்த வாய் நல்லி எலும்புக்கு ஆசைப்படுவது மாதிரி, தாதாவிலிருந்து தாத்தாவாக பிரமோஷன் ஆனபிறகு மகளைப் பார்க்க வேண்டும் என ஆசை வருகிறது நாசருக்கு.

அவரது மகனின் மகன் சிம்பு, தன் தாத்தா நாசரின் ஆசையைத் தீர்த்து வைக்க தமிழ்நாட்டுக்கு வருகிறார். தன் அத்தை ரம்யாகிருஷ்ணன் வீட்டில் சாதாரண கார் டிரைவராக வேலைக்குச் சேர்கிறார். அதுவரை கோடிகளில் புரண்டவர் எளிமையான வாழ்க்கைக்கு மாறி கொசுக்கடியையெல்லாம் சகித்துக் கொள்கிறார். அத்தை குடும்பத்துக்கு வருகிற பிரச்னைகளையெல்லாம் கொல்கிறார்…

அவரது முயற்சிகள் தந்த பலன் என்ன என்பதை சென்டிமென்டில் செதுக்கி, கண்ணீரில் குளிப்பாட்டிக் காட்டும்போது விழுகிறது என்ட்கார்டு!

எஸ்.டி.ஆர். சிம்புவுக்கு கம்பேக் படம் இது. கலகல காமெடி, கலர்ஃபுல் டான்ஸ், மாஸான ஃபைட்டு, மஜாவா ரொமான்ஸு என அத்தனை ஏரியாவிலும் வெளிப்பட்டிருக்கிறது சிம்புவின் தெம்பு!

கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் என படத்தில் இரண்டு ஹீரோயின்கள். பனிக்கட்டியில் செய்து பாதாம் பாலில் ஊறவைத்தது போலிருக்கிற அந்த இருவரின் வளைவு நெளிவுகளால் பாடல்காட்சிகள் இளமைத் திருவிழா!

நடிக்கச் சொன்னால் வாழ்ந்துவிடுகிற ராதாரவி, பிரபு, நாசர், சுமன் என ஏகப்பட்ட பிரபலமான நடிகர் நடிகைகள்… ‘படையப்பா’ நீலாம்பரியிடமிருந்து கொஞ்சம், ‘பாகுபலி’ சிவகாமி தேவியிடமிருந்து கொஞ்சம் எடுத்துச் செய்த கலவையாய் ரம்யா கிருஷ்ணன். நடிப்பு வழக்கம்போல் துடிப்பு!

காமெடி இல்லாத சுந்தர்.சி படமா? நெவர்… விடிவி கணேஷ், ரோபோ சங்கர், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் இவர்களோடு யோகிபாபுவையும் இழுத்துப் போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறது திரைக்கதை!

சிம்பு படம் முழுக்க நிறைய ‘பஞ்ச்’சடிக்கிறார். அதற்கெல்லாம் பெரிதாய் ரியாக்ஷன் காட்டாத ரசிகர்கள் அவரது நிஜ வாழ்க்கையைக் கிண்டலடிக்கிற வசனங்களை சிரித்து ரசிக்கிறார்கள்!

பாடல்களை ரசிக்கும்படி போட்டிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி பின்னணி இசையிலும் ஈர்க்கிறார்!

காமெடி என்ற பெயரில் அகலிகை, கெளதம ரிஷி, இந்திரன் என புராணக்கதையைக் கையிலெடுத்ததால் கிடைத்த பயன் படத்தின் நீளம் கால்மணி நேரம் அதிகரித்தது மட்டுமே!

சிலபல படங்களில் பார்த்த கதைதான். அதை சுந்தர்.சி ஸ்டைலில் பார்ப்பதில் கொஞ்சம் சுவாரஸ்யமிருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here