‘வடசென்னை’ (ஏ) சினிமா விமர்சனம் -சிவசங்கர்

0
965

87-ல் தொடங்கி 1991, 1996, 2003 வரை வடசென்னையில் நிகழும் கதையும் கதாபாத்திரங்களும்தான் ‘வடசென்னை’ முதல் பாகத்தின் திரைக்கதையாய் இடம் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனுஷின் மாறுபட்ட தன்மை, நடிப்பில் தெரிகிறது. பிளேயரை ஃபிளேயர் என்று அனைவரும் பேசுவது, எக்ஸ்பெக்டேசன்ஸ், கன்பர்மேசன்ஸ் என்று தனுஷ் பேசுவது என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேகி-பேண்ட், டபுள் பெல்ட், ஃபங்க், கேரம் போர்டு பிளேயர், பத்மாவின் “மக்கு கூ–“, சிறைவாசி, குணா-வேலுவின் விசுவாசி, செந்திலின் துரோகி, தனக்கே தெரியாமல் சந்திரா ஆடும் ஆட்டத்தின் சிகப்பு காய், “நா ஓடிப்போக மாட்டேன்”, “இங்கதான் இருப்பேன்” என்று இறுதியில் எழுச்சியை உருவாக்கும் புரட்சிக்காரன் என அன்பு (தனுஷ்) எனும் கதாபாத்திரத்தின் வெவ்வேறு காலக்கட்ட பரிணாமும் பரிமாணமும் வியக்க வைக்கிறது .

அன்புவுக்கும் வடசென்னையின் பிற பாத்திரங்களுக்கும் தொடர்பெழுப்பும் ஒரே பாத்திரம் ராஜன் (அமீர்). வடசென்னையின் நம்பிக்கை தவ்லத். நட்பு- பேரன்பு – பெருங்கோபம் என வலம் வருகிறார். முதுகில் குத்தப்பட்டு துரோகத்தை சந்திக்கும்போதும் சரி, தன் மக்களுக்காக பேசும்போதும் சரி தனி ஆளாக நின்று ‘கேஸ்’ வாங்குகிறார்.

“மக்கு கூ–” என்று பேசி தமிழ் சினிமாவின் பூசிமொழுகும் பாசாங்குத் தனத்தை சுக்கு நுறாக உடைக்கிறாள் பத்மா (ஐஸ்வர்யா ராஜேஷ்). அடுத்தடுத்து பத்மாவின் துடுக்கையும் மிடுக்கையும் காட்டுவதற்கு படத்தில் நேரம் பத்துமா என்ற சந்தேகம் வந்ததால் தள்ளி வைத்திருக்கிறார் இயக்குநர்.

காரசாரப் பார்வையில் வரும் அண்ணி சந்திரா (ஆண்ரியா), கோரமாக தன் கணவர் ராஜன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குகிறார் என்பதை டேனியலிடம் சொல்லும்போது, “என்ன தே–டியான்னு நெனைச்சீங்களாடா”, “ராஜன் பொண்டாட்டிடா” என்று சொல்லும்போது ஏற்கனவே இருந்த கலரை விட மேலும் ஜொலிக்கிறார்.

குணா,வேலு, செந்தில், தம்பியண்ணன் நிச்சயம் வடிவமைக்கப்பட்டிருந்தால் அத்தனை தத்ரூபமாக வந்திருப்பது கடினம்தான். இந்த பாத்திரங்களுக்கு நடிகர்களின் தேர்வு சற்றே புதுமையாக இருந்திருக்கலாம் என்றாலும் திறம்பட நடிப்பில் ‘அட்டிச்சு விட்டிருக்கிறார்கள்’.மாடிவீட்டில் உட்கார்ந்து மூளையை கசக்காமல் வடசென்னையர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து யாருக்கோ லாபத்தை ஈட்டிக்கொடுக்கும் டத்தோ ராதாரவியின் முத்து எனும் பாத்திரம்தான் இந்த டெத் ரேஸ்க்கு மூலம். குணாவின் தம்பி சங்கர், தமிழ், பத்மாவின் தம்பி ஆகிய கதாபாத்திரங்கள் சற்றே தற்கால பாத்திரம் போல வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கதையுடன் ஒன்றி வருவது சிறப்பு.

வெற்றியின் ஆஸ்தான படப்பதிவாளர் வேல்ராஜ் இருப்பதே தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தை மறைந்திருந்து படம் பிடித்து தப்பியோடி வந்த ஆவணப்படத்தின் ஃபுட்டேஜ் போல அத்தனை சிறப்பான ஃபிரேம்ஸ்; அத்தனையும் சிறப்பான ஃபிரேம்ஸ்.

படத்திற்கான கதையின் ‘பொருளை’ மட்டும் விட்டுவிட்டு மத்தத்தையெல்லாம் தன் ‘பொருள்’கொண்டு வெட்டிவிட்டு இத்தனை நீளமான படத்தை எவ்வித சலிப்புமுன்றி ஏன் படம் முடிகிறது?. ப்ச்ச்.. இரண்டே முக்கால் மணி நேரம் ஆகிவிட்டதா? என ஏங்க வைத்துள்ளார் படத்தொகுப்பாளர்.

கலை இயக்குனரோ, வடசென்னை சிங்காரவேலர் மன்றம் தொடங்கி சீட்டாட்ட க்ளப் என திரைக்கு அந்தப்புறம் எழுந்து சென்றால் 90-களின் வடசென்னை இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை வரவழைத்துள்ளார். வெவ்வேறு காலக்கட்டங்களுக்கான ஜட யதார்த்தங்களை படைக்கும் பொருட்டு மரமிழைத்துள்ளார். அதற்காக தினமுழைத்துள்ளார்.

சந்தோஷ் நாராயாணனின் இசை அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசை அடங்க மறுக்கிறது. அது முற்றிலும் வடசென்னையின் இசையாக மாறத் தவிக்கும்போது பாடலாசிரியர்களின் வரிகள் வந்து முட்டுக் கொடுக்கின்றன.

வடசென்னை என்கிற ஆடுகளத்தில் ஒவ்வொரு தருணத்தையும் நின்று நிதானமாய் விசாரணை செய்வதில் பொல்லாதவன் என நிரூபித்திருக்கிறார் இயக்குநர். வடசென்னையின் பூர்வகுடி மக்களை வைத்து வளர்ந்த சென்னை, வளர்ச்சி என்கிற பெயரில் அவர்களின் சொந்த நிலத்தை விட்டு வெளியேறச் சொல்லும் அரசை- தன்னார்வ நிறுவனங்களை- அதற்கு கைகூலிகளாகும் உள்ளூர்க் காரர்களை- வடசென்னையில் இருந்தபடி தனக்கே குழிதோண்டிக்கொள்ளும் எதேச்சதிகார விசுவாசிகளை தோலுரிக்கிறார் இயக்குநர்.வடசென்னையில் வாழும் யாரோ எழுதிக்கொடுத்த 80 பக்க கதையை இப்படி உள் வாங்க முடிவது அத்தனை சுலபமுமல்ல. அதனை இப்படி படைப்புக்குள் கொணர்ந்துள்ளது அத்தனை சாதாரண கலகமுமல்ல.

அரசியலையே தொடாமல் அரசியல் பேசி கலைஞனுக்கு அரசியல் பிரக்ஞை இருக்க வேண்டுமென உணர்த்தி தமிழ் சினிமாவின் தன்னிகர் இயக்குநராய் தன்னையும், தன்னிகர் படைப்பாய் தான் கலைப்படைப்பையும் தான் என்கிற அகந்தை இல்லாமல்; அதே சமயம் பெருமிதத்துடன் நிலைநிறுத்திக்கொண்டுள்ள இடம் வடசென்னை.

“எங்களுக்கு நல்லது செய்யறதுன்னா நாங்க வாழ்ற இடத்துலேயே செய்ங்க… சொல்றத கேட்ட யாருக்கு நல்லது அந்த பக்கம் இருக்குறவங்களுக்கா? … எங்க ஆளுங்கள வெச்சே நீங்க நினைச்சத செய்றீங்க… திரும்பி வர்றதுக்கு ஊர் இருக்கும்ங்குற நம்பிக்கையிலதான் போவாங்க… ஊரே இல்லாம போயிடுச்சுன்னா?… நா இங்கதான் இருப்பேன் ஓடிப்போறதுக்கு பதிலா என் மண்ணுல நின்னு சண்ட செய்றேன்.. ஜெயிக்குறோம் தோக்குறோம்ங்குறது இல்ல மொதல்ல சண்ட செய்யனும்… நாங்க பேசுற பாஷையே புரியலயே எங்க வாழ்க்கைய கலாச்சாரத்த புரிஞ்சுக்கிட்டு எங்களுக்கு என்ன வளர்ச்சிய செய்யப் போறீங்கன்னு சொல்லி ஏமாத்திட்டு இருக்கீங்க?” நேரடியாக படம் அடுத்த கட்ட பிரச்சனையை நோக்கி நகரும் இப்படம் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் என இருவருக்குமே பென்ச்மார்க்!.

யு சர்ட்டிபிகேட்டுக்காக சென்சாருடன் சண்டையின்றி சால்லா போகாமல், கதையுன் சால்லா போய் அத்தனை துல்லியமான வடசென்னை மொழிகளுடன் துணிந்து இறங்கியதால் வெளிச்சத்துக்கு வந்துள்ள உண்மையான வடசென்னை நம்ம ஊரில் எல்லாம் இந்த மால்கோம்-எக்ஸ் போன்ற படங்கள் வராதா என ஏங்கியவர்களுக்கு வரம்.

-sivasankarwriter@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here