‘சண்டக்கோழி-2’ சினிமா விமர்சனம்

0
1895

‘சண்டக்கோழி-2’ சினிமா விமர்சனம்

-வே.பத்மாவதி

2005-இல் வெளிவந்த ‘சண்டக்கோழி’ திரைப்படத்தை யாரும் மறக்கவே முடியாது.கிட்டத்தட்ட பதிமூணு வருஷம் கழிச்சு திரும்ப இந்த ‘சண்டக்கோழி பார்ட் 2’ வந்து இருக்கு. இது விஷாலின் 25வது படம்.

கதை

ஏழு வருஷம் முன்னாடி வேட்டைக் கருப்பன் திருவிழாவுல ஒரு பெரிய சண்டை நடக்குது. அதுல பேச்சியோட புருஷன ஒரு தகராறுல வெட்டி சாய்ச்சுடறாங்க. பேச்சி தன் புருஷன கொன்னவன் குடும்பத்துல உள்ள எல்லோரையும் பழி தீர்த்து அதே திருவிழாவுல கொன்னுடறாங்க . ஆனா அந்த வம்சத்துல ஒரே ஒரு பையன் மட்டும் தப்பிக்கிறான். அவன் தான் அன்பு. அவன எப்படியாவது கொன்னே தீரணும்னுஅந்த வம்சமே அழியணும்னு வெறியோட காத்து இருக்காங்க வரலக்ஷ்மி.

அதுக்கு அப்புறம் அந்த ஊர்ல மழையும் இல்ல திருவிழாவும் இல்லன்னு வெறிச்சோடி இருக்கு.ஏழு வருஷத்துக்கு அப்புறமா திரும்பவும் அந்த திருவிழாவ நடத்த அய்யா (ராஜ்கிரண்) கஷ்டப் பட்டு அனுமதி வாங்கிட்டு வர்றார். அந்த திருவிழாவுல ஒரு உசுரும் போகாதுன்னு சத்தியம் பண்றார்.

ஆனா பேச்சி எப்படியும் இந்த திருவிழாவுல அன்போட உயிரை எடுத்தே தீருவேன்னு சபதம் எடுக்கிறாங்க.ஒரு கட்டத்துல அய்யா உயிருக்கே ஆபத்து வர எல்லா பிரச்னையும் மீறி சொன்ன வாக்கையும் கொடுத்த வார்த்தையும் காப்பாத்தி திருவிழாவ எப்படி நடத்தி முடிக்கிறார் விஷால் அப்படிங்கறது தான் கதை.

ஏழு நாள் நடக்கிற திருவிழா தான் மொத்த படமும். அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு திக் திக்னு பார்க்கிற நமக்கு பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. படத்துல திருவிழா சீன் இருக்கலாம் ஆனா படமே திருவிழா மாதிரி இருந்த பீல்.

புரொட்யூசர் சங்கப் பிரச்சனை, நடிகைகள் கொடுக்கும் புகார் , நடிகர் சங்க பிரச்னைன்னு இத்தனையும் தாண்டி எப்படி தான் இப்படி நடிக்க முடியுதோன்னு நம்ள ஒவ்வொரு பிரேம்லேயும் பிரமிக்க வைக்கிறார் விஷால் . ஆக்ஷன் பிளாக் எல்லாமே ரொம்ப யதார்த்தமான சண்டையா அமைஞ்சு இருக்கு.

தம்பின்னு விஷால கூப்பிடும் போதும் சரி, “உன்ன கட்டிக்கிறேன் , அவன வச்சுக்கிறேன்”,”எவ்ளோ லாங் ட்ராவல் போயிட்டேன் தெரியுமா?”,”இப்ப தான் தெரியுது லவ் பெயிலர்னா ஏன் பசங்க டாஸ்மாக் போறாங்கன்னு” இப்படி எல்லாம் பட் பட்ன்னு பேசும் போது கீர்த்தி சுரேஷ் சட் சட்ன்னு எல்லார் மனசுலேயும் ஒட்டிக்கறாங்க.

யப்பா என்ன வில்லிடான்னு சொல்ல வைக்கிற அளவுக்கு பேச்சி கதாபாத்திரமாவே மாறி இருக்காங்க வரலக்ஷ்மி. பூசாரிய கோவில் மணில மோதவெச்சு சாய்க்கிறப்போ கண்ணுல அப்படி ஒரு அனல் பறக்குது.சொர்ணாக்கா , ஈஸ்வரி பட்டியல்ல இந்த பேச்சிக்கும் கட்டாயம் இடம் உண்டு .

அய்யாவா மாறி இருக்கிற ராஜ்கிரண் கம்பீரம் , அய்யாவா நடிக்கும் போது முனீஷ்காந்த் அடிக்கிற லூட்டி, ஊர் பெரியவரா வர்ற மாரிமுத்து ,இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் மனசுக்குள்ள பசை போட்டு ஒட்டிக்கிறாங்க.

டபுள் மீனிங் ஜோக்ஸ் , தேவை இல்லாத விரசமான சீன்ஸ் ,குத்து டான்ஸ் எதுவுமே இல்லாம ஏதோ கிராமத்துக்கு குடும்பத்தோட சேர்ந்து திருவிழா பார்த்துட்டு வந்த சந்தோஷம் குச்சி ஐஸ், பஞ்சுமிட்டாய், பப்படம்னு குழந்தைங்களுக்கான விஷயம், குடை ஜிமிக்கி அடுக்கு வளையல்னு பெண்களுக்கு பிடிச்ச விஷயம், கெத்து காட்டுறது, இளவட்டக் கல்னு ஆண்களுக்கு பிடிச்ச விஷயம், இப்படி ஒவ்வொருத்தருக்கும் பிடிச்ச மாதிரி பல விஷயங்கள் இருக்கு படத்துல.

வரலட்சுமிக்கு கொடுத்து இருக்கிற க்ளோஸ் அப் ஷாட்ஸ் எல்லாமே கவிதை. மீச வச்ச வேட்டைக்காரன் பாட்டுக்கு வர்ற திருவிழா இதெல்லாம் பார்க்கும் போது ஏதோ நிஜமா ஒரு ஊரையே கூப்டு போய் கறி விருந்து போட்டு அழைச்சுட்டு வந்த பிரமிப்ப கொடுத்து இருக்கார் ஒளிப்பதிவாளர் சக்தி.

“நான் மகன தானே கேட்டேன் நீ அப்பன கொடுத்துட்ட”,”ஆடும் புலியும் சேர்ந்து ஆடுற ஆட்டம்”ன்னு டயலாக்ஸ் எல்லாம் தெறிக்க விட்டு இருக்கார் பிருந்தா சாரதி .

கம்பத்து பொண்ணு , செங்கரட்டான் பாறை,மீச வச்ச வேட்டைக்காரன்னு எல்லா பாட்டுமே டான்ஸ் ஆட வச்சு ‘யூ ஆர் தி பெஸ்ட்’ன்னு நிரூபிச்சு இருக்கார் யுவன். பேக்ரவுன்ட் ஸ்கோரும் ரவுன்ட் கட்டி பண்ணி இருக்கார்னே சொல்லணும் .

மொத்தத்துல இந்த ஆயுத பூஜைக்கு ஒரு திருவிழா ஏற்பாடு பண்ணி அத எந்த குறையும் இல்லாம நடத்தி வச்சு எல்லாருக்கும் மனசு நிறையா சந்தோஷத்த அள்ளி கொடுத்து இருக்கார் இயக்குநர் லிங்குசாமி.உசிரே போனாலும் இந்த திருவிழாவை கண்டிப்பா சிறப்பா நடத்தி காட்டுவேன்னு ராஜ்கிரண் சத்தியம் எடுத்துப்பார். அது என்னவோ இயக்குநர் லிங்குசாமி அவரே எடுத்துகிட்ட சத்தியமா தோணிச்சு. கண்டிப்பா படம் ஹிட் கொடுத்தே தீரணும்னு வெறித்தனமா மொத்த டீமும் வேலை பார்த்து இருக்காங்க.
      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here