முண்டாசுப்பட்டி படத்தினை தொடர்ந்து விஸ்ணு விஷால்-இயக்குநர் ராம் குமார் மீண்டும் இணைந்த படம் ராட்சசன்.திரில்லர் ஜானரில் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகி இந்தப்  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
“இயக்குநர் ராம்குமார் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு இந்த கதையோடு வந்தார். முண்டாசுப்பட்டி இயக்குநர் என்பதை கேள்விப்பட்ட உடனே அதை ஓகே செய்தார் டில்லி பாபு சார்.
பல தடைகளை தாண்டி இந்த படம் இந்த வெற்றியை பெற்றிருக்கிறது” என்றார் நிர்வாக தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன்.
“நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது, ஆனாலும் இவ்வளவு போட்டிக்கு நடுவில் நம்ம படத்தை ரிலீஸ் பண்றோமே, என்ற பயம் இருந்தது. அவை எல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் தான் படத்தை இந்த அளவுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.
தமிழ் சினிமா ரசிகர்களும் நல்ல படம் கொடுத்தால் பார்க்க நாங்கள் ரெடி என்பதை மீண்டும் ஒரு முறை நல்ல  வரவேற்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
மொத்த குழுவும் என் மீதும், நான் தேர்வு செய்த கதை மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். நீண்ட நாளைக்கு பிறகு சிகப்பு ரோஜாக்கள், நூறாவது நாள் மாதிரி ஒரு தரமான திரில்லர் படம் கொடுத்திருக்கிறீர்கள் என்ற  பாராட்டு கிடைத்தது. அது தொடர்ந்து  நல்ல படம் கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பை எங்கள் தோள்களில் சுமத்தியிருக்கிறது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் எங்களை நம்பினார். தொடர்ந்து எங்களை ஊக்குவிப்பதாக சொல்லியிருக்கிறார், அவருக்கு நன்றி” என்றார் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு.
“இந்த படத்தில் அவர்களுக்கு ஒரு ஸ்டுடியோ தேவைப்பட்டது. என் ஸ்டுடியோவில் எல்லாம் தயாரான பிறகு, இயக்குநர் நீங்களே நடிச்சிருங்க என வற்புறுத்தியதால் தான் ஒரு காட்சியில் நடித்தேன். கிரைம், திரில்லர் படங்களையே தொடர்ந்து பண்றேன் என சொல்கிறார்கள். கதையே இல்லாத ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் செய்ய நான் ரெடி தான்.
இரு நாட்களுக்கு முன்பு உத்தமவில்லன் படம் மிக்ஸிங் செய்த இடத்தில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். இந்த படத்தின் ஆங்கில ரீமேக் உரிமையை கேட்டார்கள். அப்படி ஆங்கிலத்தில் இந்த படத்தை எடுத்தால் அதற்கு நான் இசையமைக்க ஆசைப்படுகிறேன்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
இந்த படம் ரிலீஸுக்கு முன்பு வரை மொத்த குழுவும் பதட்டத்திலேயே இருந்தோம். பத்திரிக்கையாளர்கள் படத்தை பார்த்து அவர்கள் எழுதியது தான் எங்களுக்கு உத்வேகம் கொடுத்தது. ரசிகர்கள் படத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரஷ்யாவில் வாழ்ந்த ஒரு சைக்கோவின் கதையை படிக்க நேர்ந்தது, அது தான் இந்த படத்தை எழுத உதவியது. சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் சரவணன். அவர் ரொம்ப  கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கூடிய விரைவில் அவரை மக்கள் முன் அறிமுகப்படுத்துவோம்” என்றார் இயக்குநர் ராம்குமார்.
“ராட்சசன் எங்களின் வெற்றி மட்டுமல்ல, ரசிகர்களின் வெற்றி. முதல் வாரம் நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆகிறதே என்ற பயம் இருந்தது. இப்போது இரண்டாம் வாரத்திலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் ஓடலைனா தயாரிப்பாளருக்கு நான் இன்னொரு படம் பண்ணித் தரேன்னு சொன்னேன். இப்போ படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் அந்த சந்தோஷத்தில் இன்னொரு படத்தில் நடித்து தர விரும்புகிறேன். இது சினிமாவுக்கு நல்ல காலம் என்று நினைக்கிறேன்.
தொடர்ந்து செக்க சிவந்த வானம், பரியேறும் பெருமாள், 96, ராட்சசன் என நான்கு படங்களையும் ஒரே நேரத்தில் மக்கள் ஓட வைத்திருக்கிறார்கள். அந்த நல்ல, வெற்றி படங்கள் லிஸ்டில் எங்கள் படமும் இருப்பது மகிழ்ச்சி. இந்த கதையை கேட்டவுடனேயே மிரட்டலாக இருந்தது.
ஆனாலும் குடும்பத்தோடு எல்லோரும் பார்க்கிற வகையில் காட்சிகள் அழகாக இருக்கணும் என்று சொன்னேன். ராம், ஷங்கர் இரண்டு பேரும் அதை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான். அதை தொடர்ந்து கொடுக்க முயற்சிக்கிறேன்” என்றார் நாயகன் விஷ்ணு விஷால்.
இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிவி சங்கர், சண்டைப்பயிற்சியாளர் விக்கி, ஸ்கைலார்க் ஸ்ரீதர், முண்டாசுப்பட்டி ராம்தாஸ்,மைனா சூசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here