‘பிழை’ சினிமா விமர்சனம்

0
222

‘பிழை’ சினிமா விமர்சனம்

‘படிக்கிற வயதில் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது; மீறினால் அது ‘பிழை’யாகத்தான் முடியும்’ என்ற கருத்தை சிறார்களின் மனதில் பதியவைக்கும் முயற்சியாய் ஒரு படம்!

அது சிறிய கிராமம்.

அந்த கிராமத்தில் சிலபல ஏழைக் குடும்பங்கள். குவாரியில் கல் உடைத்து வாழ்க்கையை நகர்த்தும் குடும்பத் தலைவர்கள்.

அப்படிப்பட்ட குடும்பங்களில் இருந்து மூன்று பிள்ளைகள் படிப்பின்மீது விருப்பமில்லாமல் விஷமத்தனம் செய்துகொண்டு ஊரில் கெட்டப் பெயர் வாங்கித் திரிய, மூன்று பேரின் அப்பாக்களும் கண்டிக்கிறார்கள்.

சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிப்போன ஒருவன் வளர்ந்து வாலிபனாகி, நன்கு சம்பாதித்து கெளரவமாக ஊருக்குள் வருகிறான். வந்தவன் ஒரு பெண்ணைக் கவர்ந்து காதலியாக்கிக் கொண்டு ஜாலியாய்த் திரிகிறான்.

அவனைப் பார்த்துப் பார்த்து, அவனைப் போலவே தாங்களும் ஊரைவிட்டு ஓடிப்போக வேண்டும், அவனைப் போலவே பணம் சம்பாதித்து கெத்தாக ஊர் திரும்பவேண்டும் என விரும்புகிறார்கள் அந்த மூன்று சிறுவர்கள்.

விரும்பியபடியே ஓடியும் போகிறார்கள். இது கதையின் ஒரு பாதி.

போனவர்கள் என்னவானார்கள்? இது மிச்சம் மீதி.

இயக்கம்: ராஜவேல் கிருஷ்ணா

‘காக்காமுட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நஸாத், உடன்வரும் இன்னொரு சிறுவன் என மூன்றுபேரும் முடிந்தவரை நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள்.

பாசக்கார அப்பாக்களாக சார்லி, ‘மைம்’ கோபி, ஜார்ஜ். பிள்ளைகளைக் கண்டிப்பது, தண்டிப்பது, அவர்களைப் பிரிந்தபின் தவிப்பது என மூவரிடமிருந்தும் இயல்பான நடிப்பு!

எஃப்.எஸ்.ஃபைஸலின் பின்னணி இசையும் பாக்கியின் ஒளிப்பதிவும் கதையோட்டத்தின் தேவைக்குத் தீனி போட்டிருக்கின்றன.

படத்தின் முன்பாதியில் வருகிற காதல் ஜோடியும் பின்பாதியில் வருகிற இன்னொரு காதல் ஜோடியும் கதைக்கு பெரிதாய் உதவவில்லையென்றாலும் நடிப்புப் பங்களிப்பு நிறைவு.

ஒரு சின்னஞ்சிறு ஹோட்டல். அதில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி, சம்பளம் கொடுக்காமல் அடித்து உதைத்து சித்திரவதை செய்வது, அந்த தப்பை கண்டுகொள்ளாமலிருக்க போலீஸுக்கு ஆயிரமாயிரமாய் கொட்டிக் கொடுப்பது என அமைத்திருக்கிற காட்சிகள் பார்க்கிறவர்களின் பரிதாபத்தைச் சம்பாதிக்கும் என இயக்குநர் நினைத்திருக்கக்கூடும். மன்னிக்கவும். அந்த காட்சிகள்தான் பரிதாபமாய் இருக்கின்றன.

படத்தில் சுட்டிக்காட்ட ‘பிழை’கள் அதிகமிருந்தாலும், ‘வாழ்வின் முன்னேற்றத்துக்கு படிப்பு மட்டுமே மூலதனம்’ என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பதை குறைசொல்வதற்கில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here