அருட்சகோதரர் ஜான்சன் எழுதிய ‘நாளை நமதே!’ நூல் அறிமுகம் 

0
339

நாளை நமதே!

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை நூல்

இன்றைய இளைய சமுதாயம் கேள்விக்குறியாகிப் போனதற்கு காரணம் யார்?

அம்மா, அப்பா, பாட்டி என ரத்த சொந்தங்களின் உணர்வு சார்ந்த ஒழுக்க நெறிகளை மறக்கச் செய்வது எது?
இளைஞர்களின் நேரத்தைப் பிடுங்குவது எது?

இந்த கேள்விகளுக்கான பதில்களை அலச முற்படும் முயற்சியாக, சென்னை அடையாறு பெட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரர் ஜான்சன் எழுதியிருக்கும் நூல் இது.

‘சும்மா அதிருதுல்ல’, ‘எழுந்து சுடர்விடுக,’ ‘பாட்டி சுட்ட வடை’, ‘பயத்திற்கு பயம் காட்டு’, ‘அரசியல் பழகு’ என இந்த நூலில் மொத்தம் 21 கட்டுரைகள். அத்தனையும் ஆக்கபூர்வமானவை; இளைய சமுதாயத்தை யோசிக்க வைப்பவை. அவர்களை நல்வழிப்படுத்த ஆழமான அறிவுரைகளை கொண்டவை.

‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரை இருக்கிறது.

குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்ற எளிய நடை, கட்டுரைகளில் திருக்குறளை, உலகளவில் பிரபலமான கவிஞர்களின் சிந்தனைகளை மேற்கோள் காட்டியிருப்பது நூலின் தனித்துவம்!

தமிழ்நாட்டுக் கவிஞர் ஆசுராவின் சிந்தனைகள் மீது நூலாசிரியருக்கு தனி ஈர்ப்பு உண்டு போலும்…
‘விருப்பம் கேட்கவில்லை / கணவனாய் கட்டிலில் கற்பழிப்பு.’
அடுக்குமாடிக் குடியிருப்பு / அறையெங்கும் பசுமை / வால்பேப்பரில் செடிகள்.’ -இப்படி ஆசுராவின் கவிதைகள் கட்டுரைகளில் அங்கங்கே எட்டிப் பார்க்கின்றன.

‘தோல்வியைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள கட்டுரையில் தோல்விகளைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு வெற்றி பெற்றவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பது படிப்போரின் மனதில் தோல்வி குறித்த கவலையை, பயத்தைப் போக்கி எழுச்சியை உருவாக்கும்!

இளைஞர்களுக்கு வழிகாட்டும் நூல் என்பதால் இளைஞர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று கருதத் தேவையில்லை. எல்லா வயதினரும் படிக்கலாம். அப்படித்தான் அமைந்துள்ளன நூலின் கட்டுரைகள்.

பள்ளிகள், கல்லூரிகளில் நடபெறும் விழாக்களில் மாணவ, மாணவிகளுக்கு பரிசாக வழங்க உகந்த நூல்.

விலை: ரூ 120

வெளியீடு: விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை -600 002
போன்: 044 – 2852 4074
Mail: books@vikatan.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here