எம். ஜி. ஆர். – ஜெயலலிதா அனிமேஷன் தோற்றத்தில் ஜோடியாக நடிக்க பரபரப்பாக உருவாகி வருகிறது கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற திரைப்படம்.

எம். ஜி. ஆர். நடித்த ஃபேமஸான படங்களில் ஒன்று உலகம் சுற்றும் வாலிபன். அந்த படத்தின் தாறுமாறான வெற்றியைத் தொடர்ந்து அதேபோன்ற கதையம்சத்துடன் கூடிய இன்னொரு படத்தை இயக்கி நடிக்க நினைத்து அதற்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என பெயர் வைக்கப் போவதாகவும் சொல்லிருக்கிறார் எம். ஜி. ஆர்.

அரசியல் ஈடுபாடு, முதலமைச்சர் ஆனது என காலப்போக்கில் எம்.ஜி.ஆர் .வேறு விதமாக வளர்ந்து விட்டதால் படங்களில் நடிக்க முடியவில்லை. அவர் நினைத்தபடி கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தையும் எடுக்க முடியவில்லை. அவரது விருப்பம் கனவாகவே போய்விட்டது.

எம்.ஜி. ஆரின் அந்த கனவு கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு நனவாக்கியிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகனுமான ஐசரி கணேஷ் எம். ஜி. ஆரின் கனவுப் படத்தை அனிமேஷன் MOTION CAPTURE TECHNOLOGY தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறார்.

கதை, திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்குகிறார் எம் அருள்மூர்த்தி. கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு இன்று மாலை நடந்தது.

உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 15.7. 2018 ஞாயிறன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார். மலை 7 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

அதன்பின் விழாவின் ஹைலைட் அம்சமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் பாடலினை சென்னையின் முன்னாள் மேயர் ,அதிமுகவைச் சேர்ந்த சைதை துரைசாமி வெளியிட நடனப்புயல் பிரபுதேவா மற்றும் இயக்குநர் விஜய் பெற்றுக் கொண்டார்கள்.

”எம்ஜிஆரின் ஸ்டைல், அவருடைய டிரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன. என் அப்பா எம்ஜிஆருக்கு நான்கு படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மகிழ்ந்துள்ளேன்’’ என்றார் நடனப்புயல் பிரபுதேவா.

பிரபுதேவா & ஐசரி கணேஷ்

விழாவில் ”இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இரண்டு பேர் தான். ஒன்று எம்ஜிஆர். அவர் தான் இப்படி ஒரு சிறப்பான தலைப்பை கொடுத்தவர். இன்னொருவர் எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ். அவர் கொடுத்த முழு சுதந்திரம் தான் இந்த படம் இந்த அளவுக்கு வர காரணம். எந்த தலையீடும் இல்லாமல் அவர் அளித்த சுதந்திரமும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. வைரமுத்து சாரின் வரிகளும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய பலம். படம் மிக சிறப்பாக வரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” என்றார் இயக்குநர் அருள்மூர்த்தி.

”இங்கு வந்திருக்கிற எல்லோருமே எம்ஜிஆர் ரசிகர்கள் தான். அவர் மீது உள்ள அன்பு, மரியாதை தான் இதற்கு முக்கிய காரணம். டிரெய்லர் பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. வைரமுத்து புரட்சித் தலைவருக்கான வரிகளை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் ’’ என்றார் இயக்குநர் விஜய்.

விழாவில் கொல்லங்குடி கருப்பாயி பாடல் பாடிய இசை நிகழ்ச்சியும், ஸ்ரீதர் மாஸ்டரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஆர்ஜே விஜய் இசை விழாவை தொகுத்து வழங்கினார்.

முக்கியச் செய்தி 1: 17.1.2019 அன்று எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளில் இந்த படம் உலகம் முழுவதிலும் வெளியிடப்படும் என சில மாதங்கள் முன் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்திருந்தார்கள்!

முக்கியச் செய்தி 1: ஐசரி கணேஷின் தந்தையும் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவருமான மறைந்த ஐசரி வேலனும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் நடிக்கிறார் என்பது முக்கியச் செய்தி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here