மனுசத் தன்மையே இல்லாத ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்கு ஆளாகி நாங்களும் ‘மனுசங்கதாண்டா’ என கொதித்தெழும் தலித் சமூகத்தினரின் சோகக்கதை.அந்த கிராமத்தில் தலித் சாதியினர் இறந்து போனால் பிணத்தை பொதுப்பாதை வழியாக எடுத்துப் போய் அடக்கம் செய்யவிடாமல் உயர்சாதிக்காரர்கள் தடுப்பதும், மீறினால் வன்முறையைக் கையிலெடுப்பதும் காலங்காலமாக பழக்கத்திலிருக்கிற வழக்கம். சரி இதைவிட கொடுமை என்னவென்றால் அவர்களுக்கென தனிப்பாதையும் கிடையாது.முட்புதர்களில் தான் தங்கள் பொன்னான கால்களை வைத்து புண்ணாக்கி கொள்ள வேண்டும்.
இந்த சாதிக்கொடுமையை எதிர்த்து இறந்து போன தன் அப்பாவை பொதுப்பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கான முயற்சியை முன்னெடுக்கிறான் அந்த இளைஞன். அந்த முயற்சி, பிணத்தை தன் குடிசை வீட்டில் வைத்துக் கொண்டு நாள்கணக்கில் போராடுகிற சூழலை உருவாக்குகிறது.எப்படிப்பட்ட சூழ்நிலை அது? ஆதிக்க சாதியினரை எதிர்க்கிற அவனது போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா? என்பதே ‘மனுசங்கடா’ படம் ஆவணப்படுத்தியிருக்கிறது.
ஹீரோவாக ராஜீவ் ஆனந்த் யதார்த்தப் படம் என்பதை உணர்ந்து நடித்துள்ளார். அழுகையும், கோபமுமாய் படம் முழுக்க அத்தனை காட்சிகள். அத்தனையிலும் மெத்தனம் இல்லாமல் நடித்துள்ளார். சாதிப்புராணம் பாடும் கிராமத்தை பார்த்து எரிச்சலடையும் ஷீலா ராஜ்குமார் படம் முழுக்க கவனிக்க வைக்கிறார்.இரண்டாம் பாதியில் கேமரா காட்டிய வேகம், முதல் பாதியில் மிகக்குறைவு தான். டெக்கினிக்கல் எரர் ரீதியாகவே படத்தை படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.எஸ் தரன். அரவிந்த்-சங்கர் இசையமைத்துள்ளனர். ஆட்டம் போடவைக்கும் சாவுக்குத்து, இடையில் எட்டிப்பார்க்கும் மெல்லிய இசை காட்சிகளுக்கு கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் சிதம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்றைய காலகட்டத்தில் கதை நடப்பதாக காட்டுகிறார்கள். அந்த பகுதியில் இப்போது படத்தில் காட்டப்படுவது போன்ற கொடுமை நடக்கிறதா என புரியவில்லை. நம் தாத்தா, பாட்டி காலத்தில் நடந்த நிகழ்வுகளை இந்தக் காலகட்ட சூழ்நிலையுடன் இணைத்துள்ளார் இயக்குநர் அம்ஷன் குமார்.சர்வதேச அவார்டுகள் பலவற்றை இந்தப் படம் வாங்கி குவித்துள்ளது.
உரிமைக்கு போராடும் களத்தில் தங்களைத் தாங்களே தாழ்த்தப்பட்டவர்கள் என கோர்ட்டில் அடையாளப்படுத்துவது லாஜிக் மீறல். படத்துக்கு மையக் கருத்தே இந்த லாஜிக்தான் என உணரத் தவறியுள்ளனர். இதனை உணர்ந்து குறையை களைந்து எடுத்திருந்தால் கமர்சியல் ரீதியாக சிறப்பான படமாக வந்திருக்கும் இந்த ‘மனுசங்கடா.’