தேவயானியின் மகள் அதிதி மேனன், அட்டகத்தி தினேஷைக் காதலிக்கிறார். தினேஷுக்கும் அதிதிக்கும் கல்யாணம் ஏற்பாடாகிறது.
இந்த நேரத்தில், தேவயானி தன் கணவர் ஆனந்த்ராஜுக்கு கார் ஓட்டத் தெரியாததால் அவரை வருடக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே வேண்டாத மனிதனாக நடத்துகிற விஷயம் தினேஷுக்குத் தெரியவருகிறது.
விஷயம் தெரிந்ததும் அதுவரை கார் ஓட்டத் தெரியாத தினேஷ், நண்பன் உதவியோடு ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பழகுகிறார். துரதிஷ்டவசமாக, தேவயானி ஓட்டிக்கொண்டு வரும் கார் மீது மோதுகிறார்.
விபத்துக்குள்ளான தேவயானி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் தினேஷை சந்திக்கிறார்.
அதன்பின் என்னவெல்லாம் காமெடி கலாட்டாக்கள் அரங்கேறுகின்றன என்பதே கதை. இயக்கம் காந்தி மணிவாசகம்
காமெடி ஏரியாவில் புகுந்து கலக்க அனுபவப்பட்ட அநேகம் பேர் படத்தில் இருப்பதால் தான் என்ன செய்வதென்று புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டேயிருக்கிறார் அட்டகத்தி தினேஷ். அதுவே கதைக்குப் போதுமான நடிப்பைக் கொடுத்திருக்கிறது. பாடல் காட்சிகளில் வழக்கத்தைவிட சற்றே கூடுதல் சிரத்தையெடுத்து ஆடியிருப்பதை பாராட்டவேண்டும்.
நேந்திரம் பழத்தில் செய்த அல்வா போலிருக்கிற அதிதிமேனனுக்கு நடிப்பைக் கொட்டிக் குவிக்க வாய்ப்பில்லாத கதாபாத்திரம். அழகாய்ச் சிரிக்கிறார், அளவாய்க் காதலிக்கிறார், டூயட் பாட்டில் ஆடுகிறார்.
பணக்காரப் பெண்மணியாக தேவயானி. முரட்டுச் சவரன்கள் கழுத்தில் புரள, படு காஸ்ட்லியான புடவையணிந்து வருகிற அவரது ஆடை அலங்காரமே பாதி நடித்து விடுகின்றன. மீதிப் பாதிக்கு தன் இயல்பான நடிப்பால் கம்பீரம் சேர்த்திருக்கிறார்.
ஆனந்த்ராஜ் வருகிற காட்சிகளிலெல்லாம் தன் காதுவரை வாய்விரியச் சிரிக்கிறார்; நம்மையும் சிரிக்க வைக்கிறார்.
‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இப்படித்தான் காமெடிசெய்வார் என இயக்குநர்கள் முத்திரை குத்தி வெகுநாளாயிற்று. அந்த முத்திரைக்கேற்பவே அவருக்கான காமெடி ஏரியாவை ஒதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
காமெடி வில்லனாக முனீஸ்காந்த். தினேஷுக்கும் அவருக்குமான பகையும் பழிவாங்கல் படலமும் கலகல லகலக!
என். ஆர். ரகுநந்தன் இசையில் பாடல்கள் இனிமை. காட்சிகளை ரசிக்கும்படி வண்ணமயமாக்கியிருக்கிறது சரவணன் அபிமன்யுவின் கேமரா!
படத்தின் பல காட்சிகள் இயக்குநர் கதைக்காகவும் திரைக்கதைக்காகவும் பெரிதாக மெனக்கெடவில்லை என்பதைச் சொன்னாலும் அங்கங்கே சிரிக்க முடிவது படத்தின் பலம்.
காட்சிகளின் நீள அகலங்களை ஆபாசத்தை, வன்முறையை என்றெல்லாம் இட்டு நிரப்பாமல் சின்னதாய் ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை காமெடியாக தர முயற்சித்திருப்பதற்காகவே அறிமுக இயக்குநர் காந்தி மணிவாசகத்தை பாராட்டலாம்!