“பிரமோஷனுக்கு மேல பிரமோஷன்… நடந்ததெல்லாம் நினைச்சே பார்க்க முடியாத மிராக்கிள்!” – தன் வாழ்க்கையில் கீழையூர் காத்தாயி அம்மன் நிகழ்த்திய அற்புதங்களைப் பகிர்கிறார் கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ணசாமி

0
109

“பிரமோஷனுக்கு மேல பிரமோஷன்… நடந்ததெல்லாம் நினைச்சே பார்க்க முடியாத மிராக்கிள்!”

-தன் வாழ்க்கையில் கீழையூர் காத்தாயி அம்மன் நிகழ்த்திய அற்புதங்களைப் பகிர்கிறார் கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ணசாமி

கீழையூர் காத்தாயி அம்மன் கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ணசாமி

“கீழையூர்லயிருந்து பத்துப் பதினைஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற செம்பியன்மாதேவிங்கிற கிராமம்தான் எங்க பூர்வீகம். அப்பா, அப்பாகூட பிறந்தவங்க எல்லாரும் உத்தியோக நிமித்தமா சென்னைக்கு வந்து செட்டிலாகிட்டாங்க.

நான் படிச்சதெல்லாமும் சென்னையிலதான். 1975-ல காலேஜ் படிப்பை (M.com., C.A.II B.)முடிச்சுட்டு, ஒரு பிரைவேட் கம்பெனில வேலைக்குச் சேர்ந்தேன். அடுத்த வருஷமே ‘இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ல கிளர்க் உத்தியோகம் கிடைச்சுது. கவர்ன்மென்ட் வேலை, படிச்ச படிப்புக்கு ஏத்த உத்தியோகம், அதுவும் படிப்பு முடிச்சு ஒரே வருஷத்துல! எவ்ளோ சந்தோஷமான மனநிலைல இருந்திருப்பேன்னு யோசிச்சுப் பாருங்க. அப்போன்னு பார்த்து அதாவது நான் பேங்க் உத்தியோகத்துல சேர்ந்து ஆறாவது மாசத்துல என்னோட தகப்பனார் காலமாயிட்டார். இந்தியன் பேங்க்ல அதிகாரியா இருந்த அவருக்கு அப்போ அவருக்கு வயசு 49தான்.

குடும்பத்துல நான் மூத்தவன்; ரெண்டு தம்பி, மூன்று தங்கைன்னு கூடப் பிறந்தவங்க அஞ்சு பேர். அப்பா காலமான பிறகு அவங்களையெல்லாம் கவனிச்சுக்கிற பொறுப்பு என்னோடதுன்னு ஆகிப்போச்சு. அப்பாவை சட்னு இழந்ததால குடும்பத்துல எல்லாருமே மனசொடிஞ்சுப் போயிருந்தோம். ஒரு வருஷம் அப்படியே போச்சு.

அப்போதான் எங்க பாட்டி, குடும்பத்துல மூத்தவன்கிற முறைல எங்கிட்டே ‘குலதெய்வ கோயிலுக்கு போய்ட்டு வா’ன்னு சொன்னாங்க.

காலங்காலமா காத்தாயி எங்களுக்கு குலதெய்வம்னாலும் எனக்கு விவரம் தெரிஞ்சு யாரும் கோயிலுக்குப் போனதா தெரியலை. அதனால அந்த கோயில் எங்கேயிருக்கு, எப்படி போறது வர்றது அப்படிங்கிற விவரம்லாம் எனக்கு பிடிபடலை. பாட்டி ஓரளவுக்கு சொன்னாங்க.

அப்போவெல்லாம் சிட்டிலேருந்து கிராமத்துல இருக்குற கோயிலுக்குப் போறதுன்னா கோயில் அர்ச்சகருக்கு லெட்டர் போட்டு தகவல் தெரிவிக்கிறது வழக்கம். அதே மாதிரி காத்தாயி அம்மன் கோயில் பூசாரிக்கு லெட்டர் போட்டேன்.

சென்னைல இருந்து டிரெய்ன் மூலமா திருத்துறைப்பூண்டி போய் அங்கிருந்து பஸ்ல கீழையூருக்குப் போறதா பிளான். அதே மாதிரி ராத்திரி சென்னைல கிளம்பி விடிகாலைல திருத்துறைப்பூண்டி போய் சேர்ந்துட்டேன். அங்கிருந்து கீழையூர் வழியா போற பஸ்ல ஏறி கண்டக்டர்கிட்டே ஸ்டாப்பிங் வந்தா சொல்லச் சொன்னேன். அவரும் சரியான இடத்துல இறக்கி விட்டார். அந்த பஸ் ஸ்டாப்பே பூசாரி வீட்டு வாசல்தான். காலைல 7 மணிக்கே அவர் முன்னாடி நிக்கிறேன்.

அந்த பூசாரி, நான் வர 9 மணிக்கு மேல ஆகும்னு நினைச்சிருக்கார். 7 மணிக்கே போனதுல அவருக்கு ஆச்சரியம்.

‘நான் குளிச்சு ரெடியாகி, பூஜைக்கான பொருளெல்லாம் வாங்குற வரைக்கும், நீங்க நான் சொல்ற வீட்ல போய் குளிச்சு ரெடியாகுங்க’ன்னு சொன்னார். அவர் சொல்லிவிட்டது கோயிலைக் கவனிச்சுக்கிற உள்ளூர்ப் பெரிய மனிதர் சுப்பிரமணிய பிள்ளைங்கிறவரோட வீடு. அங்கே போனேன். அந்த காலகட்டத்துல சுப்பிரமணிய பிள்ளையோட மகன் ரெங்கநாதன்ங்கிறவர் தான் கோயிலைக் கவனிச்சுக்கிட்டிருந்தார். அவர் வீட்ல குளிச்சு ரெடியானேன்.

ரெண்டு மணி நேரம் கழிச்சு பூசாரி வந்து என்னை கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனார். நான் சென்னைல பிறந்து வளர்ந்தவன். நான் பார்த்ததெல்லாம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்னு எல்லாமே பிரமாண்டமான கோயில்கள்.

காத்தாயி அம்மன் கோயிலும் அப்படித்தான் இருக்கும்னு நினைச்சிருந்த எனக்கு பயங்கர ஷாக். சின்னதா ஒரு ஓட்டுவீடுதான் கோயில். அதுல பக்கவாட்டுல ஒரு கதவு, சாமிக்கு எதிர்ல ஒரு கதவுன்னு ரெண்டு கதவு இருந்துச்சு. அதாவது ரெண்டு வாசல். அதுல சாமிக்கு எதிர்ல இருந்த கதவு பூட்டியிருந்தாலும் அதை அப்படியே தூக்கி எங்கே வேணாலும் வைக்கலாம்கிற மாதிரி இருந்துச்சு. ‘நம்மளோட குலதெய்வ கோயில் இப்படி இருக்கே’ன்னு மனசுக்குள்ள ரொம்ப வருத்தம்.

சென்னைக்குத் திரும்பி கோயிலோட நிலைமை பத்தி வீட்ல சொன்னப்போ, பாட்டி ‘கோயில் எப்படி இருந்தாலும், அதுல இருக்குற காத்தாயி சக்திவாய்ந்தவ, நல்லதே நடக்கும்’னு சொன்னாங்க. அதே மாதிரி கொஞ்சநாள்லயே, கிளர்க்கா இருந்த நான் அதிகாரியா பிரமோஷன் கிடைச்சு டிரான்ஸ்பர்ல டெல்லிக்குப் போனேன். காத்தாயி என் வாழ்க்கையில நிகழ்த்தின முதல் அற்புதம்னா இதைத்தான் சொல்வேன். அப்போ எனக்கு வயசு 24.

அடுத்ததா தங்கைக்கு திருமணமும் நல்லபடியா முடிஞ்சுது.

இதெல்லாம் நடந்தபிறகு கோயிலுக்குப் போய்வர்றது தொடர்ந்துச்சு. அப்படி போறப்போவெல்லாம் ரெங்கநாத பிள்ளையை சந்திக்கிறது வழக்கம். கோயிலோட திருப்பணிகளுக்கு எங்களால முடிஞ்சதை அவர் மூலமா செய்துக்கிட்டு வந்தோம்.

சில வருஷங்கள் கழிச்சு கோயில் நிர்வாகம் ராமசாமி படையாச்சிங்கிறவர் வசம் வந்துச்சு. அவர் காலத்துல நன்கொடைகள் திரட்டி கோயிலுக்கு புது தோற்றத்தையும் கம்பீரத்தையும் கொண்டு வந்தார். கோயிலுக்கு 2000 மற்றும் 2014-ல கும்பாபிஷேகம் ஆச்சு. இரண்டு முறையும் நன்கொடை திரட்டிக் கொடுத்தேன்.

எப்போ கோயிலுக்குப் போய் வந்தாலும் காத்தாயி அம்மன் கருணையால வாழ்க்கையில திருப்புமுனை நிச்சயம்! 1984-ல எனக்கு நல்லபடியா கல்யாணமாச்சு. மூணு வருஷத்துல மகன் பிறந்தான். காத்தாயி முன்னிலைல அவனுக்கு முடியிறக்கினோம்.

டெல்லில உத்தியோகம் பார்த்துக்கிட்டிருந்த நான் டிரான்ஸ்பர்ல தெரெழுந்தூர் வந்தேன். அடுத்ததா சென்னை ஈக்காடுதாங்கல், சென்னை சைதாப்பேட்டை, காஞ்சீபுரம், அங்கிருந்து மும்பை, அடுத்து ஈரோடு, திருச்செங்கோடு திருப்பூர்னு மாறிக்கிட்டே இருந்தேன். 2004-ம் வருஷம் காஞ்சீபுரத்துல கிளை மேலாளரா ஒர்க் பண்றப்போ என்னோட பணியைப் பாராட்டி சிறப்பு விருது கொடுத்ததோட, ‘ஸ்பெஷல் டிரெய்னிங்’க்காக ஹாங்காங் டிரிப் போய்ட்டு வந்ததும் நடந்துச்சு.

ரிட்டயர்மென்ட்க்கு இன்னும் ரெண்டு வருஷம்தான் இருக்குங்கிறப்போ சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருந்தேன். கேட்டபடி டிரான்ஸ்பர் கிடைச்சுது. அது சந்தோஷமான விஷயம்னா, அதுவரை உத்தியோகத்துல ‘பிராஞ்ச் ஹெட்’டாவே இருந்த எனக்கு சென்னையில ஒதுக்கப்போற உத்தியோகம் அத்தனை திருப்தி தர்றதா இல்லை. இதனால மனக்கஷ்டத்துல இருந்த சமயம்…

அப்போவும் நான் போய் நின்னது காத்தாயி அம்மன்கிட்டேதான். அன்னைக்கு அம்மனை தரிசனம் செய்துட்டு சென்னை திரும்பியபிறகு நடந்ததெல்லாம் ‘மிராக்கிள்’தான்!”

“அந்த அற்புதம் பத்தியும் சொல்லுங்களேன்.”

“என்னுடைய சென்னை டிரான்ஸ்பருக்கு கிளியரன்ஸ் கொடுக்குற பொறுப்புல இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த விஜிலென்ஸ் ஆஃபீஸர் என்னைப் பத்தி விசாரிச்சுருக்கார். அதனோட விளைவா, டிரான்ஸ்பர் ஆர்டர்ல நானே எதிர்பார்க்காத பவர்ஃபுல் பொறுப்பு. சென்னைல கோடிக்கணக்குல பணம் புழங்குற பிராஞ்ச்’ல பெரிய பதவி ஒதுக்கப்பட்டிருந்துச்சு. எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். ரெண்டு வருஷம் கம்பீரமா அந்த பதவியில இருந்துட்டு ரிட்டயர் ஆனேன்.

வேலைல சேர்ந்த புதுசுல அப்பா காலமானதால மன உளைச்சல், ரிட்டயருக்கு முன்னே கிடைச்ச டிரான்ஸ்பர் மூலமா மன உளைச்சல், வாழ்க்கையில எல்லாருக்கும்போல எனக்கும் வந்த இன்னபிற கஷ்டநஷ்டம் எல்லாத்துலேருந்தும் மீண்டு வந்தது, குடும்பத்துல மூத்தவன்கிற முறைல என் தம்பி, தங்கைகளையெல்லாம் நல்லபடியா ஆளாக்கினது எல்லாமே காத்தாயி அம்மனோட கருணையாலதான்!”

“கோயிலோட சிறப்பம்சம்னா எதை சொல்வீங்க?”

“சாதி, இனப் பாகுபாடு இல்லாம பிராமணர், பிள்ளைமார், விஸ்வகர்மா, முதலியார்ன்னு பலருக்கும் குலதெய்வமா இருக்குறதுதான் சிறப்பு. கோயில்ல சேவல், ஆடுன்னு பலியிட்டு படையல் போடுறதும் நடக்கும். எங்களைப் போல பிராமணர்கள் சர்க்கரைப் பொங்கல் வெச்சு நைவேத்தியம் செய்றதும் நடக்கும்.”

“கோயிலுக்கு அறக்கட்டளை தொடங்கினது பத்தி சொல்லுங்க.”

“2018-ல கஜா’ புயல் அடிச்சு கோயிலோட காம்பவுன்ட் சுவர்லாம் இடிஞ்சு விழுந்தபிறகு மீண்டும் அதை எடுத்துக் கட்டணும்கிறப்போ, அந்த பொறுப்பை ஏத்துக்கிட்டிருந்த அண்ணாதுரை எனக்கு போன் பண்ணார். கோயிலோட திருப்பணிகளுக்கு பணம் காசு செலவு பண்றது மட்டுமில்லாம உடல் உழைப்பையும் கொடுக்கிற ஆசாமி அவர். அவர் என்கிட்டே கேட்ட நன்கொடை விஷயமா அவரை நேர்ல சந்திக்க கீழையூர் போனேன்.

திருப்பணிகளுக்கு நன்கொடை திரட்டணும்னா கோயிலுக்குன்னு டிரஸ்ட் இருந்து அந்த பெயர்ல பேங்க் அக்கவுன்ட் இருந்தா நல்லாயிருக்கும்னு முடிவெடுத்தோம். காத்தாயி அம்மனோட பக்தர்கள்ல வயசுல மூத்தவரும் கோயிலோட தலைவருமான கே. எஸ். கங்காதரன், அவரோட தம்பிகள் சீனிவாசன், சேதுராமன்னு சிலர் சரியான ஆலோசனைகள் சொல்லி வழிநடத்தினாங்க. 88 வயசான கே. எஸ். கங்காதரன் அவர்களை தலைவரா நியமிச்சு ‘காத்தாயி அம்மன் டெம்பிள் டிரஸ்ட்’ன்னு உருவாக்கினோம்.

கோயில் நிர்வாகம் தனி நபர்கிட்டே இருந்தா அவரோட காலத்துக்குப் பிறகு, அதுவரை நடந்துக்கிட்டிருந்த பணிகள் சரிவர நடக்காம போக, அல்லது நின்று போக வாய்ப்பிருக்கு. அப்படி சில விஷயங்களும் காத்தாயி அம்மன் கோயில்ல நடந்திருக்கு. இனி அது மாதிரி நடக்கக்கூடாதுன்னுதான் இந்த டிரஸ்டை தொடங்கினோம்.

அறக்கட்டளை உறுப்பினர்களை / நன்கொடையாளர்களை ஒருங்கிணைக்கிற விதமா வாட்சப் குரூப் ஆரம்பிச்சோம். கோயிலோட தினப்படி பூஜைக்கு, விசேஷ நாட்கள்ல அபஷேக ஆராதனைகளுக்கு, மற்ற திருப்பணிகளுக்கு, அன்னதானத்துக்கு நன்கொடையா யார் யார் என்ன தொகை தர்றாங்க அப்படிங்கிறதை குரூப்ல பதிவிடுறதை வழக்கமாக்கினோம்.

வரவு செலவு வெளிப்படையா இருக்கணும்; யார் இருந்தாலும் இல்லைன்னாலும் சூரியனும் சந்திரனும் இருக்குற காலம்வரை டிரஸ்ட் இருக்கணும், அது இயங்கிக்கிட்டே இருக்கணும். அதுதான் நோக்கம்!”

“கோயில் சார்பா நடக்குற அன்னதானம் பத்தி சொல்லுங்க?”

“பொதுவா பக்தர்கள் கோயில்ல அன்னதானம் செய்றதை விரும்புவாங்க. பலருக்கு அது வேண்டுதலாவும் இருக்கும். நம்ம காத்தாயி அம்மன் கோயில் பொறுத்தவரை பக்தர்கள் தினமும் கூட்டம் கூட்டமா வர்றதில்லை; குறைஞ்ச எண்ணிக்கைலதான் வந்து போய்க்கிட்டிருக்காங்க. தவிர, அங்கே அன்னதானம் பண்றதுக்கு இன்னமும் போதிய வசதிகளை ஏற்படுத்தலை. சரி, என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ கோயில்லயிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துல ஒரு முதியோர் இல்லம் இருக்குன்னு தெரியவந்துச்சு.

நாம்கோ’ங்கிற அமைப்பு ( NAMCO – National Mother and Child Welfare Organisation) )நடத்துற, பணியாளர்களோட சேர்த்து 35 பேர் இருக்குற அந்த முதியோர் இல்லத்துல அன்னதானம் செய்யலாம்னு தீர்மானிச்சோம். பக்தர்கள் அன்னதானத்துக்காக தர்ற நன்கொடையை வெச்சு அதை செயல்படுத்திக்கிட்டிருக்கோம். மாசத்துல குறைஞ்சது 10 நாள் அந்த முதியோர்களுக்கு வடை பாயசத்தோட உணவு கிடைக்குது.”

திரு. கிருஷ்ணசாமி அவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள்:-

📌 வயது 65.

📌 கீழையூர் காத்தாயி அம்மன் கோயிலின் மருளாளிகளில் வயதில் மூத்தவரும், கோயிலின் அறங்காவலர் குழுவின் தலைவருமான கே. எஸ். கங்காதரனின் உறவினர்.

📌 சொந்த ஊர் நாகை மாவட்டத்திலுள்ள செம்பியன் மாதேவி. இந்த ஊர் கீழையூரிலிருந்து 12 கி.மீ. தூரத்திலிருக்கிறது.

📌 கிருஷ்ணசாமியின் தாத்தா கிருஷ்ணசாமிக்கு வெங்கட்ராமன், கணேசன், சுந்தரேசன் என மூன்று பிள்ளைகள். இவர்களில் வெங்கட்ராமன் அவர்களின் முதல் மகன் கிருஷ்ணசாமி. அப்பாவும் சித்தப்பாவும் வங்கிப் பணியில் அதிகாரியாக இருந்திருக்கிறார்கள்.

📌 அம்மா பெயர் கெளரி.

📌 பிறந்தது, வளர்ந்தது, துவக்கக் கல்வியிலிருந்து கல்லூரிப் படிப்பில் பி.காம் முடித்ததுவரை சென்னையில்.

📌 1975-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தபின், ஒருவருட காலம் சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் பணி.

அதற்கடுத்த வருடமே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளர்க் பணி. அடுத்த இரண்டாண்டுகளிலேயே பதவி உயர்வோடு டெல்லியில் பணி. அதை தொடர்ந்து பணி மாறுதலாகி மாறுதலாகி தெரெழுந்தூர், சென்னை ஈக்காடுதாங்கல், சென்னை சைதாப்பேட்டை, காஞ்சீபுரம், பாம்பே, ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர் என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 12 கிளைகளில் தலைமைப் பொறுப்பு (Branch Head) வகித்தவர். பணி ஓய்வுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் பணியிட மாறுதலில் சென்னையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு வந்தவர், அங்கும் கிளையின் தலைமைப் பதவி வகித்து பணி ஓய்வு பெற்றார்.

📌 பணி ஓய்வுக்குப் பின்னர் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் பொருட்டு கன்சல்டேசன் நிறுவனமொன்றை துவங்கி நடத்தி வருகிறார்.

📌 கிருஷ்ணசாமியின் மனைவி சுஜாதா. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி, சீனியர் அக்கவுன்டன்ட்ஸ் ஆபீஃஸர் என்ற உயரிய பொறுப்பு வகித்து, 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர்.

📌 கிருஷ்ணசாமி – சுஜாதா தம்பதியின் ஒரே மகன் ஸ்ரீராம் படிப்பை முடித்தபின் விப்ரோ நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் வகித்தார். இப்போது ஐ.பி.எம். நிறுவனத்தில் ஜி.எம். பொறுப்பில் தொடர்கிறார்.

📌 ஸ்ரீராமின் மனைவி பெயர் லலிதா பத்மினி. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

📌 கிருஷ்ணசாமியின் தந்தை வெங்கட்ராமன் அவர்கள் தனது 49-வது வயதில் 1977-ம் ஆண்டு காலமானார்.

📌 கிருஷ்ணசாமியின் சித்தப்பா (தந்தையின் சொந்த தம்பி) கணேசன். வயது 87. தன் மனைவி, மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

📌 கிருஷ்ணசாமியின் இன்னொரு சித்தப்பா சுந்தரேசன் தனியார் நிறுவனமொன்றில் உயரதிகாரியாக பணியாற்றியவர். அவர் காலமாகி விட்டார். அவரது மனைவியும் மகனும் இரண்டு மகள்களும் சென்னையில் வசிக்கிறார்கள்.

‘காத்தாயி அம்மன் டெம்பிள் டிரஸ்ட்’ அமைப்பினர் குறித்த விவரம்:-
தலைவர் திரு. கங்காதரன்
உறுப்பினர்கள்:-
திரு. சீனிவாசன்
திரு. ஏ. சேதுராமன்
திரு. ஜி. பாலசுப்ரம்ணியம்
திரு. கிருஷ்ணசாமி
திரு. ஜி. அண்ணாதுரை
திரு. காசிராமன்
திரு. கல்யாணராமன்
திரு. சூரியமூர்த்தி
திருமதி உஷா கணேஷ்
திரு. கணேஷ் நடராஜன்
திரு. பிரேம் ஆனந்த்
திரு. சிவசங்கரன்

எழுத்தாக்கம்:- சு. கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here