“அம்மனுக்கு உடுத்த என் மனைவி அவங்க கையாலேயே பாவாடை தைச்சுக் கொடுப்பாங்க!” -காத்தாயி அம்மனுக்கும் தன் குடும்பத்துக்குமான பந்தம் பற்றி சொல்கிறார் ‘தொழுதூர்’ பிராமணக் குடும்பத்திலிருந்து டி.என். ராமமூர்த்தி

0
91

“அம்மனுக்கு உடுத்த என் மனைவி அவங்க கையாலேயே பாவாடை தைச்சுக் கொடுப்பாங்க!”

-காத்தாயி அம்மனுக்கும் தன் குடும்பத்துக்குமான பந்தம் பற்றி சொல்கிறார் ‘தொழுதூர்’ பிராமணக் குடும்பத்திலிருந்து டி.என். ராமமூர்த்தி

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள, தொழுதூர் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட பிராமணக் குடும்பங்களில் பலருக்கும் பரிகாரதேவதை என்ற முறையில் குலதெய்வமாக இருக்கிறாள் கீழையூர் காத்தாயி அம்மன்.

அந்த வரிசையில் வருகிறது டி.என். ராமமூர்த்தியின் குடும்பம்.

தன் மனைவியுடன் டி.என். ராமமூர்த்தி

அவருக்கும் கீழையூர் காத்தாயி அம்மனுக்குமான பந்தம் எப்படியானது? இதோ அவரே சொல்கிறார்…

“நாகை மாவட்டத்துல திருக்குவளைக்குப் பக்கத்துல கொளப்பாடுன்னு ஒரு ஊர் இருக்கு. எங்க (அப்பாவின் அப்பா) தாத்தா ராமசாமி அய்யர் அந்த ஊர்லேயே பெரிய மிராசுதார். கொளப்பாடுலேருந்து கீழையூர் காத்தாயி அம்மன் கோயில் ஏழெட்டு கி.மீ. தூரம்தான்.

எங்களுக்கு எட்டுக்குடியில இருக்கிற முருகனும், பழையங்குடியில இருக்கிற நல்ல மாரியம்மனும்தான் குலதெய்வம். கூடவே கிராமதேவதையான காத்தாயி அம்மனையும் குலதெய்வமா வழிபடுற வழக்கம் உண்டு. அந்த வகையில தாத்தா ராமசாமி அய்யர் காலத்துல அடிக்கடி அந்த கோயிலுக்குப் போறதும் வர்றதுமா இருந்திருக்காங்க.

காத்தாயி அம்மனுக்கு உகந்த கறுப்பு நிற புடவை!

காலப்போக்குல எங்க குடும்பம் மயிலாடுதுறை பக்கம் வந்துட்டோம். நான் ஸ்கூல் படிச்சப்போ, எங்களோட குலதெய்வமான எட்டுக்குடி முருகன் கோயிலுக்கும் பழையங்குடி நல்ல மாரியம்மன் கோயிலுக்கும் போய் வர்றதுண்டு. என்னவோ தெரியலை, காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போறது மட்டும் விட்டுப் போய்டுச்சு. கோயிலுக்குப் போய் வரலைன்னாலும் காத்தாயி அம்மனை மறக்காம வருஷா வருஷம் வீட்ல மாவிளக்குப் போட்டு, காத்தாயி அம்மனுக்கு உகந்த கறுப்பு நிற புடவை வைத்துப் படைப்பாங்க.

அந்தக் காலத்துல எங்க தாத்தா ராமசாமி அய்யர் எப்படியோ அதேபோல தாத்தாவோட தம்பி லெஷ்மண அய்யரும் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போக வர்ற இருந்திருக்கார். அவரோட மகன், வெங்கட்ராம அய்யர்னு பேரு. மத்த சொந்தபந்தமெல்லாம் காலப்போக்குல வெவ்வேறு ஊர்களுக்கு போய்ட்டாலும் அவரோட குடும்பம் தொழுதூர்லயே இருந்துச்சு. அவர் தான் எங்களையெல்லாம் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போக வர இருக்கணும்னு வலியுறுத்திக்கிட்டு இருந்தார்.

1996- 97 காலகட்டத்துல என்னோட மூணு பிள்ளைகளுக்கும் கல்யாணமாச்சு. புதுசா வீட்டுக்கு வந்த மருமகள்களையும் சேர்த்து ஒட்டுமொத்த குடும்பமும் எங்க குலதெய்வக் கோயிலான எட்டுக்குடிக்கும் பழையங்குடிக்கும் கிளம்பினோம். அப்போ தேடிப்பிடிச்சு காத்தாயி கோயிலுக்கும் போய்ட்டு வந்தோம். அப்படி ஆரம்பிச்சது… அதுக்குப் பிறகு நாங்க எட்டுக்குடிக்கும் பழையங்குடிக்கும் போறப்போவெல்லாம் காத்தாயி அம்மனை தரிசனம் பண்றதையும் வழக்கமாக்கிக்கிட்டோம். முடிஞ்ச நன்கொடையும் செய்துகிட்டு வந்தோம்.

காத்தாயிக்கு என் மனைவி பாவாடை தைத்துக் கொடுப்பாங்க!

பொதுவா அம்மனுக்கு சாத்துறதுக்கான பாவாடையெல்லாம் மஞ்சள், சிவப்பு, பச்சைனு பளீர் நிறத்துலதான் இருக்கும். ஆனா, கறுப்பு நிறம்தான் காத்தாயி அம்மனுக்கு உகந்ததுன்னு சொல்வாங்க. ஆனா, கறுப்பு நிறத்துல பாவாடை கிடைக்காது. அதனால, கறுப்பு நிறத்துல பட்டுத்துணி வாங்கி அதுல என் மனைவி பாவாடை தைச்சுக் கொடுப்பாங்க. அதைத்தான் காத்தாயிக்கு சாத்துவோம்.

அபிஷேகத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு!

நாங்க போகத் தொடங்கிய அந்த காலகட்டத்துல கோயில் சிதிலமடைஞ்ச மாதிரிதான் இருந்துச்சு. தண்ணி வசதியும் கிடையாது. அதனால அம்மனுக்கு அபிஷேகம் பண்ணணும்னா கூட முடியாத நிலைமை. தேவைப்படுறப்போ எங்கேயோ போய் ஒரு குடத்துல தண்ணி எடுத்துக்கிட்டு வருவாங்க. இந்த நிலைமையை மாத்த, எங்க சின்ன தாத்தா லெஷ்மண அய்யரோட கடைசி மகன் நாராயணசாமி அய்யர் ஸ்டெப் எடுத்தார். கோயிலோட நிர்வாகத்துக்கிட்டே பேசினார். எவ்ளோ செலவாகும்னு எஸ்டிமேட் ரெடியாச்சு. தொழுதூர் குடும்பங்கள் சார்பா நன்கொடை திரட்டி போர் போட்டு பம்ப் செட் அமைக்க பணம் கொடுத்தோம். அப்போ ராமசாமி படையாச்சிங்கிறவர் கோயில் நிர்வாகத்தைப் பார்த்துக்கிட்டிருந்தார். ரொம்ப நேர்மையான மனுஷன்; அவரை முழுசா நம்பலாம். எந்த வேலைக்கு பணம் கொடுக்கிறோமோ அந்த வேலை கச்சிதமா முடிஞ்சுடும். அதே மாதிரி பம்ப் போடுற வேலையும் நடந்து முடிஞ்சுச்சு.

அதுக்கடுத்து, கோயிலுக்கு கும்பாபிஷேகம் பண்ண ஏற்பாடாச்சு. எங்க பங்களிப்பா என்ன செய்றதுன்னு யோசிச்சப்போ, ராமசாமி படையாச்சிகிட்டே பேசினோம். பலரும் நன்கொடையா பொருட்களைக் கொடுக்குறதாவும் பணமா வந்ததுல மொத்த செலவ கணக்குப் பார்த்தா 60’000 ரூபாய் குறையுறதாவும் சொன்னார். அந்த தொகையை நாங்க கொடுத்தோம். கும்பாபிஷேகம் எளிமையா, சிறப்பா நடந்துச்சு. எங்களாலதான் போகமுடியலை.

கும்பாபிஷேகம் பண்ண பிறகு கோயில்ல தினப்படி நைவேத்தியத்துக்கும் விளக்குப் போடுறதுக்காகவும் ராமாசாமி படையாச்சி சொன்ன ஆலோசனையை ஏத்துக்கிட்டு 20,000 ரூபாயை பேங்க்ல டெபாசிட் பண்ணோம். அந்த பணத்துக்கு கிடைச்ச வட்டித் தொகையை கோயிலுக்கான ஒரு மாத தினப்படி செலவுக்காக பயன்படுத்திக்கிட்டாங்க. இந்த திட்டத்துக்கு நான் மட்டுமில்லை; வேறு சிலரும் நன்கொடை கொடுத்தாங்க.

வளர்ச்சிப் பணிகளில் வேகம் & நேர்த்தி!

கிட்டத்தட்ட 25 வருஷமா கோயிலுக்குப் போக வர இருக்கோம். ஆரம்பத்துல நாங்க பார்த்த கோயிலோட தோற்றத்தையும் இப்போ இருக்குற தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். கோயில் எவ்வளவோ வளர்ந்திருக்கு. அதுலயும் குறிப்பா போன வருஷக் கடைசியில ‘காத்தாயி அம்மன் டெம்பிள் டிரஸ்ட்’னு ஒரு அறக்கட்டளை உருவான பிறகு, கோயிலோட வளர்ச்சிப் பணிகள் வேகமாவும் நேர்த்தியாவும் நடக்குது. அந்த டிரஸ்ட் பொறுப்புல கோயிலைச் சுத்தி காம்பவுண்ட் சுவர் கட்டத் தொடங்கினப்போ என்னோட பங்களிப்பா 25,000 கொடுத்தேன். ஜம்னு சுவர் எழுப்புனதோட வேறுசில மராமத்துப் பணிகளையும் செய்தாங்க. செய்ததோட மட்டுமில்லாம ஆட்களை நியமிச்சு கோயிலை சுத்தம் பண்றதெல்லாமும் நல்ல முறையில நடக்குது. அதெல்லாம், திருப்பணிகளுக்கு நன்கொடை செய்ற எங்களை மாதிரியான பக்தர்களுக்கு திருப்தியா இருக்கு!”

திரு. டி. என். ராமமூர்த்தி அவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள்.

✒️ ராமமூர்த்தியின் தந்தையார் தொழுதூர் நடராஜ அய்யர். தாயார் ஜானகியம்மாள்.

✒️ தொழுதூர், ராமமூர்த்தியின் இனிசியலில் ‘டி’ என்று ஒட்டிக் கொண்டிருக்கிறது.

✒️ எலக்ட்ரிகல் இன்ஜினியரான ராமமூர்த்தி, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக டெல்லி, திரிபுரா, பஞ்சாப் என இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றி தனது 55-வது வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர். தன் பணிக்காலத்தில் பவர் பிளாண்ட் கமிஷனிங் இன்ஜினியராக (Commissioning Engineer) லிபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பியுள்ளார்.

✒️ ராமமூர்த்தியின் மனைவியின் பெயர் சுலோச்சனா. இவர்களுக்கு மூன்று மகன்கள். மூவருமே பெரியளவில் படித்தவர்கள்.

📌மகன்களில் மூத்தவர் பிரசாத். இந்தியாவிலும் சிங்கப்பூரிலும், லண்டன் – ரோம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பணியாற்றியவர். சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்; இப்போது பணிபுரிவது அமெரிக்காவில்.
📌அடுத்தவர் சுந்தர். அமெரிக்காவில் பணிபுரியும் இவர் அமெரிக்க குடியுரிமையும் பெற்றவர்.
இந்த இருவர் பணிபுரிவதும் உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களில். வகிக்கிற பதவியின் உயரமும் பெரிது.
📌இளையவர் கபில்; சென்னையில் வசிக்கிறார். சொந்தமாக பைனான்ஷியல் சர்வீஸ் நிறுவனம் நடத்துகிறார். 150 பேர்வரை பணிபுரியும் அவரது நிறுவனத்துக்கு மும்பை, பெங்களூரில் கிளைகள் இருக்கிறது. மூவருமே நிறைவான மணவாழ்க்கையையும் குழந்தைச் செல்வங்களையும் பெற்றிருக்கிறார்கள்.

✒️ ராமமூர்த்தி தன் இளைய மகன் வழி பேத்தி சுவர்ணா ஹரீத் நீச்சல் வீராங்கனையாக போட்டிகளில் கலந்துகொள்வதையும், பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ள அவர் கடந்த ஜனவரி மாதம் 17 வயதுக்குட்பட்டோருக்கான தேசியளவிலான நீச்சல் போட்டியொன்றில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றதையும் பெருமிதமாக குறிப்பிடுகிறார்.

எழுத்தாக்கம்:- சு. கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here