“தன் சம்பாத்தியத்திலிருந்து காத்தாயி அம்மனுக்கு சொத்து எழுதி வைத்த நடேசப் பிள்ளை!” -பின்னணியில் நடந்தது என்ன? விளக்குகிறார் நடேசப் பிள்ளையின் பேரன் வே. முருகன்

0
86

“தன் சம்பாத்தியத்திலிருந்து காத்தாயி அம்மனுக்கு சொத்து எழுதி வைத்த நடேசப் பிள்ளை!”

-பின்னணியில் நடந்தது என்ன? விளக்குகிறார் நடேசப் பிள்ளையின் பேரன் வே. முருகன்

மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்டவர் திரு. நடேசப் பிள்ளை. ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர், தன் சம்பாத்தியத்திலிருந்து கோயில்களுக்கு சொத்துக்கள் எழுதி வைத்துள்ளார்.

கீழையூர் அருள்மிகு காத்தாயி அம்மன் கோயிலுக்கும் அவரது சொத்து வந்து சேர்ந்திருக்கிறது. அதன் பின்னணி பற்றி அறிந்து கொள்வதற்காக நடேசப் பிள்ளையின் பேரன் வே. முருகன் அவர்களை தொடர்புகொண்டோம். சுருக்கமாகப் பேசினார்…

“தலைமுறை தலைமுறையா நாங்க இருக்குறது மயிலாடுதுறையில. எங்க தாத்தா நடேசப் பிள்ளை. அவருக்கு ஆன்மிக ஈடுபாடு ரொம்ப அதிகம். சபரிமலைக்கு பெரிய பாதை வழியா நடந்தே போய் வர்றது அவரோட வழக்கம். ஒவ்வொரு முறை போறப்போவும் வீட்ல பெரிய பங்ஷன் நடக்கும்; பூஜையெல்லாம் அமர்க்களப்படும்.

எங்க ஊர்ல ‘முழுக்கு’னு சொல்லப்படுற ‘ஐப்பசி மாத துலா உற்சவம்’ நிகழ்ச்சி ரொம்ப ஃபேமஸ். ஊர்லயிருக்கிற எல்லா சாமியும் காவிரியாத்துல நீராடுறதுக்காக திருவுலா வர்ற விழா அது. அதுலயும் தாத்தாவோட ஈடுபாடு, பங்களிப்பெல்லாம் பெருசா இருக்கும்.

அப்படியிருக்கிறப்போ பரம்பரை பரம்பரையா குலதெய்வமா இருக்குற காத்தாயி அம்மன்மேல தாத்தாவோட ஈடுபாடு எப்படியிருக்கும்னு யோசிச்சுக்கோங்க.

தாத்தாவுக்கு மன்னார்குடி சுற்றுவட்டத்துல நிறைய விவசாய நிலம் உண்டு. விவசாயம் பண்றதோட பட்டாசு மொத்த வியாபாரத்திலும் (ஹோல்சேல் லைசென்ஸ் ஹோல்டர்) ஈடுபடுவார். கடுமையான உழைப்பு, நல்ல சம்பாத்தியம்.

தாத்தாவோட சம்பாத்தியத்துக்கும் செல்வாக்குக்கும் உதாரணமா ஒரு விஷயம் சொல்றேன்… எங்க ஊர்ல ‘ரங்கவிலாஸ் புகையிலை’ன்னு ரொம்பப் பெரிய நிறுவனம் ஒண்ணு இருக்கு. அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்துல எங்க தாத்தா அவங்களுக்கு பொருளாதார உதவி செய்திருக்கார். அதுக்கு பிரதிபலனா ஒரு காலகட்டம் வரை அந்த நிறுவனம் லாபத்துலேருந்து தாத்தாவுக்கு குறிப்பிட்ட தொகையை ஊக்கத்தொகையா கொடுத்துக்கிட்டிருந்தாங்க.

தாத்தா அப்படியெல்லாம் சம்பாதிச்சதுலயிருந்து கோயில் குளத்துக்கு அப்பப்போ நன்கொடை வழங்குறது வழக்கம். அது மட்டுமில்லாம அவரோட கடைசி காலத்துல, அவர் எந்தெந்த தெய்வங்கள் மேலயெல்லாம் ரொம்ப பற்று வெச்சிருந்தாரோ அந்த கோயிலுக்கெல்லாம் நிலம் எழுதி வெச்சார். தான் அதுவரை சம்பாதிச்சு சேர்த்ததுல பாதியை கோயில்களுக்கு உயில் எழுதினார். காத்தாயி அம்மனுக்கு எழுதி வெச்சதும் அப்படித்தான். கிட்டத்தட்ட ரெண்டு எக்கர்! (திரு. நடேச பிள்ளை காத்தாயி அம்மன் கோயிலுக்கு எழுதி வைத்த உயிலின் நகல் இந்த பேட்டியின் நிறைவில் இணைக்கப்பட்டுள்ளது.)

தாத்தா உடல்நிலை சரியில்லாம, கிட்டத்தட்ட ஒரு வருஷகாலம் சாப்பிட முடியாம இருந்தார். கீழையூர் காத்தாயி அம்மனுக்கு நிலம் எழுதி வெச்சது அப்போதான். இது நடந்தது 1982-ல.

அதன்பிறகு உடல்நிலை தேறி, எட்டு வருஷகாலம் நல்லாயிருந்தார். 90-வயசுல காலமானார். அதுக்குப் பிறகுதான் தாத்தா எழுதிவெச்ச உயில் நடைமுறைக்கு வந்துச்சு.

இப்போ எங்களுக்கு வசதியிருக்கு. எங்கு போறதா இருந்தாலும் கார்ல கிளம்பிடறோம். என்னோட சின்ன வயசுல குலதெய்வ கோயிலுக்கு போறது வர்றதெல்லாம் டிரெய்ன்லதான். மயிலாடுதுறைலயிருந்து டிரெய்ன்ல திருத்துறைப்பூண்டி போய்,அங்கிருந்து பஸ்ல கீழையூர் போவோம்.

அப்போவும் சரி, இப்போவும் சரி வீட்ல எந்த சுபகாரியம்னாலும் குலதெய்வ கோயிலுக்குப் போய்வந்த பிறகுதான் செய்வோம். 2 வருஷத்துக்கு ஒருமுறை அண்ணன், தம்பி, பங்காளின்னு எல்லா சொந்தமும் காத்தாயி அம்மனை தரிசிக்க போவோம். என்னோட குடும்பம் பொறுத்தவரை ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருமுறை காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போய்ட்டு வந்துடுவோம். திருப்பணிகளுக்கு நன்கொடை அது இதுன்னு எங்களால முடிஞ்சதை செஞ்சிக்கிட்டிருக்கோம். காத்தாயி அம்மன் எங்களை நல்லா வெச்சிருக்கா.”

“உங்க குடும்பப் பின்னணி பத்தி சொல்லுங்க.”

“தாத்தா நடேச பிள்ளையோட தம்பியின் மகன் வேலாயுதம். அவரோட மகன்தான் நான்.

எங்க அப்பாவுக்கு என்னையும் சேர்த்து ஆறு பிள்ளைகள். அதுல ரெண்டு பேர் வெளிநாட்ல இருக்காங்க. மத்தவங்க அரசாங்க வேலைல இருக்காங்க. நான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணிட்டிருக்கேன். அது தவிர, மயிலாடுதுறைல ‘விக்னேஷ் ஷூ மார்ட்’ங்கிற பெயர்ல ஷூ’க்கள் விற்பனை பண்ற ஷோரூமும் வெச்சிருக்கேன்.

எனக்கு கல்யாணமாகி 20 வருஷமாகுது. மூத்த மகன் பிரவீன் காலேஜ் படிப்பை முடிச்சுட்டு இன்ஜினியர் பணியில இருக்காப்ல. இரண்டாவது மகன் 10-வது படிக்கிறா. என்னோட அண்ணன் மகள் மிருதுளா டாக்டரா இருக்காப்ல!”

எழுத்தாக்கம்:- சு. கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here