முன்னேற்றப் பாதையில் மணக்குடி முதலியார் குடும்பங்கள்; வளர்ச்சிக்கு துணை நிற்கும் கீழையூர் காத்தாயி!  -ஆச்சரிய அனுபவங்களைப் பகிர்கிறார்கள் திரு. அண்ணாதுரை & திரு. தில்லை சிவநேசன்

0
152

முன்னேற்றப் பாதையில் மணக்குடி முதலியார் குடும்பங்கள்; வளர்ச்சிக்கு துணை நிற்கும் கீழையூர் காத்தாயி!

 -ஆச்சரிய அனுபவங்களைப் பகிர்கிறார்கள் திரு. அண்ணாதுரை & திரு. தில்லை சிவநேசன்

அருள்மிகு காத்தாயி அம்மன் அருளாட்சி செய்கிற கீழையூரிலிருந்து நான்கைந்து கி.மீ. தூரத்தில் இருக்கிறது மணக்குடி. அந்த ஊரைச் சேர்ந்த ஏராளமான முதலியார் குடும்பங்களில், பல குடும்பங்களுக்கு கீழையூர் காத்தாயி அம்மன்தான் குலதெய்வம்!

திரு. அண்ணாதுரை

அம்மனின் அருளால் அவர்களில் பலரும் அவரவர் சார்ந்த வேலையில், தொழிலில் முன்னேறி நலமோடும் வளமோடும் வாழ்ந்து வருகிறார்கள். அதற்குச் சான்றாக இருப்பவர்களில் இரண்டு பேரிடம் உரையாடினோம்…

திரு. அண்ணாதுரை. செங்குந்த முதலியார் வகுப்பைச் சேர்ந்த இவர் வயதில் அரை நூற்றாண்டைக் கடந்தவர்.

நகைக்கடை அதிபரான அண்ணாதுரை, காத்தாயி அம்மன் மீது அதீத பக்தியும் பாசமும் கொண்டவர். கோயிலின் திருப்பணிகளில் இவருடைய பங்களிப்பு எப்போதுமே ஏராளம், தாராளம்!

காத்தாயி அம்மனை தன்னுடைய தாய் என்றும், தன்னை காத்தாயி அம்மனின் அடிமை என்றும் அடிமனதிலிருந்து சொல்கிற அண்ணாதுரை, ‘காத்தாயி அம்மன் டெம்பிள் டிரஸ்ட்’ அறக்கட்டளையின் பொருளாளராகவும் இருக்கிறார்.

பேட்டியின் நிறைவில், “காத்தாயி என் வீட்டுக்குள்ளேயே இருக்கா. வெள்ளி, செவ்வாய் சாம்பிராணி புகைல காட்சி கொடுக்கிறா!” என்று சொல்லி அது பற்றி விளக்கியபோது உடல் சிலிர்த்தது.

தொடர்ந்து படியுங்கள். நீங்களும் அந்த பக்திச் சிலிர்ப்பை உணரலாம்…

“உங்களைப் பத்தி சொல்லுங்க.”

“எங்க பூர்வீகம் மணக்குடி. எங்க தாத்தா சீனிவாச முதலியாருக்கு 6 பிள்ளைங்க, 2 பொண்ணுங்க. அவருக்கு மூணாவதா பிறந்தவர்தான் என்னோட அப்பா. பெயர் கோபாலகிருஷ்ணன்.

என்னோட மனைவி கவிதா. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். எங்க வீடு மணக்குடிலேருந்து எட்டுப் பத்து கிலோமீட்டர் தூரத்துல தலைஞாயிறுல இருக்கு. சொந்தமா நகைக்கடை வெச்சிருக்கேன்.”

“கோயிலுக்கும் உங்களுக்குமான தொடர்பு பத்தி சொல்லுங்க.”

“மணக்குடியிலும் அதனோட சுத்துவட்டாரத்திலும் 300லேருந்து 400 முதலியார் குடும்பங்கள் இருக்கும். அதுல 150லேருந்து 200 குடும்பங்களுக்கு காத்தாயி அம்மன்தான் குலதெய்வம். மணக்குடியிலேருந்து கீழையூர் நாலைஞ்சு கிலோ மீட்டர் தூரம்தான்.

பல தலைமுறையா எங்களுக்கு காத்தாயி அம்மன்தான் குலதெய்வம். எங்க அப்பாவுக்கு காது குத்தினது, எனக்கு காது குத்தினது, நான் என்னோட ரெண்டு பிள்ளைங்களுக்கு காது குத்தினது எல்லாமே காத்தாயி அம்மன் கோயில்லதான். காது குத்து மட்டுமில்ல, எங்க குடும்பத்துல எந்த நல்ல காரியம்னாலும் காத்தாயி அம்மனுக்கு அர்ச்சனையோ, அபிஷேகமோ செய்யாம பண்ணமாட்டோம்.”

“காத்தாயி அம்மன் உங்க வாழ்க்கையில நிகழ்த்தின அற்புதங்கள் பத்தி சொல்லுங்க.”

“ஒரு புக்கே போடுற அளவுக்கு இருக்கு. சிலதை மட்டும் சொல்றேன்…

♦️எங்களுது வசதியான குடும்பம்னாலும் நான் எனக்கான எதையுமே என்னோட சொந்தக்கால்ல நின்னு சாதிக்கணும்னு நினைக்கிற டைப். 1995-ல வேலைக்காக வெளிநாடு போற முயற்சில இறங்கினப்போ ஒரு பெரிய தொகையை வட்டிக்கு வாங்கினேன். அதுக்கு உதவினதும், சவூதில வேலை கிடைச்சு – அங்கே பிரமாண்டமான டிரக் வாகனத்தை ஓட்டிக்கிட்டுப் போனப்போ பெரியளவுல நடக்க இருந்த விபத்துலயிருந்து என்னைக் காப்பாத்துனதும் காத்தாயிதான்!

♦️எனக்கு 1999-ல கல்யாணமாச்சு. மனைவி பெயர் கவிதா. எங்க கல்யாணத்துக்கு காத்தாயி அம்மன் கோயிலோட பூசாரி (சுப்ரமணியம்) சாமிக்கு சாத்தின மாலையோடு வந்தார். அதை காத்தாயி அம்மனே நேரில் வந்து ஆசீர்வதிச்சதா நினைக்கிறேன்!

♦️கவிதா எனக்கு வாழ்க்கைத் துணையா அமைஞ்ச பிறகுதான் சொந்த பிஸினஸ்ல இறங்குறதுக்கு வாய்ப்பு கைகூடுச்சு. முதற்கட்டமா அடகுக் கடை வெச்சோம். அதுக்கு ‘கவிதா பேங்கர்ஸ்’ன்னு மனைவியோட பெயரை வெச்சேன். கொஞ்சகாலம் போனபிறகு சொந்தமா நகைக்கடை ஆரம்பிச்சோம். அதுக்கும் ‘கவிதா ஜுவல்லரி’ன்னு மனைவியோட பெயரைத்தான் வெச்சேன். இப்போவும் எங்க ஜுவல்லரி ஷாப்புக்கு அதே பெயர்தான். பிஸினஸ் நல்லபடியா போய்க்கிட்டிருக்கு. அதுக்கு துணையா இருந்து வழிநடத்துறதும் காத்தாயிதான்!

♦️எங்களுக்கு கல்யாணமாகி ரொம்பநாள் குழந்தை இல்லை. அந்த குறையை போக்குற விதமா ஒரு ஆண், ஒரு பெண்ணுன்னு ரெட்டைக் குழந்தைகளை (Twins) கொடுத்ததும் காத்தாயிதான்!

♦️என்னோட மக திவ்யா இப்போ எம்.பி.பி.எஸ். படிக்கிறாங்க. இப்போல்லாம் டாக்டர் சீட் கிடைக்கணும்னா ‘நீட்’ தேர்வுங்கிற பெரிய சவாலை சந்திச்சே ஆகணும். அந்த சவால்ல ஜெயிச்சு என் மக இப்போ எம்.பி.பி.எஸ். படிக்கிறதுக்கு உறுதுணையா இருக்குறதும், காத்தாயிதான்!

♦️எங்களோட மகன் தினேஷ் பி.இ. (மெக்கானிக்கல்) முதலாமாண்டு படிச்சுக்கிட்டிருக்கான். அவனுக்கும் காத்தாயிதான் துணை!

♦️சில வருஷம் முன்னாடி ஆங்கிலப் புத்தாண்டு அன்னிக்கு நடந்த சம்பவம் இது… கோயில்ல இப்போ பூசாரியா இருக்குற ரவி ஆக்சிடென்ட்ல சிக்கிக்கிட்டார். ரத்தம் கொட்டக் கொட்ட ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணோம். அவரைக் காப்பாத்தினதும் காத்தாயிதான்! இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

“அம்மன் உங்ககூடவே வசிக்கிறதா சொல்றீங்களே?”

“மர பல்லி தெரியும்ல? நம்ம வீட்லயெல்லாம் அங்குமிங்குமா சுவத்துல திரியுமே. அதே மாதிரி பெரிய சைஸ்ல உடம்பெல்லாம் கறுப்பும் பழுப்புமா புள்ளிகளோட இருக்கும். அந்த மர பல்லிகளை காத்தாயி அம்மன் கோயில்ல பார்த்திருக்கேன். ஒரு காலகட்டத்துல கோயிலை புனரமைச்சு கும்பாபிஷேகமெல்லாம் ஆனபிறகு அந்த பல்லிகளை அங்கே பார்க்க முடியலை.

ஆச்சரியம் பாருங்க… அதன்பிறகு அதே மாதிரி ரெண்டு, மூணு பல்லிகளை எங்க வீட்ல பார்க்க முடிஞ்சுது. இப்போவும் அந்த பல்லிகள் இருக்குது. எங்க வீட்ல செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக் கிழமையும் சாம்பிராணி போடுவோம். அப்போ தவறாம எங்கிருந்தாலும் அந்த பல்லிகள் எங்க கண்ல படற மாதிரி திரியறது வழக்கமா இருக்கு. இது போதாதா, காத்தாயி எங்ககூடவே இருக்கான்னு நாங்க நம்புறதுக்கு? அந்த பல்லிகள் மூலமா அம்மனே காட்சி கொடுக்குறதாதான் நாங்க நினைக்கிறோம்.”

“அம்மனுக்கு நீங்க செய்த திருப்பணிகள் பத்தி சொல்லுங்க.”

“ஏராளமான நல்ல மனிதர்கள் பங்களிப்போட நடக்குற திருப்பணிகள்ல என்னோட பங்களிப்பு கொஞ்சம் வெயிட்டா இருக்குற மாதிரி பார்த்துப்பேன். அப்படி செய்ற அளவுக்கு காத்தாயி என்னை பொருளாதார ரீதியா நல்லா வெச்சிருக்கா. திருப்பணிக்கான நன்கொடைகளை பணமா கொடுக்குறது மட்டுமில்லாம கோயில்லயிருந்து எட்டுப் பத்து கிலோமீட்டர் தூரத்துக்குள்ள இருக்குறதால எல்லா திருப்பணிகள்லயும் என்னோட உடல் உழைப்பையும் முடிஞ்ச வரை கொடுத்துக்கிட்டு வர்றேன்.

♦️கோயில்ல காத்தாயி அம்மன் கூட பச்சையம்மனும் மாரியம்மனும் இருப்பாங்க. அதுல மாரியம்மன் சிலையோட முகம் கொஞ்சம் தெளிவில்லாம இருக்கும். சரி, அதை மாத்தலாம்னு தீர்மானிச்சப்போ, என் சொந்த செலவுல மாரியம்மன் சிலையை வாங்கிக் கொடுத்தேன்.

♦️கோயில் நிர்வாகம் ராமசாமி படையாச்சிங்கிறவரோட பொறுப்புல இருந்து, அவர் காலமான பிறகு அவரோட மகன் கைக்கு வந்துச்சு. அந்த காலகட்டத்துல கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்தப்போ பிள்ளையார் சுழி போடுற விதமா 10,000 ரூபாய் கொடுத்து தொடங்கி வெச்சேன்.

♦️2016-ம் வருஷம் ஒருநாள் கோயில் உண்டியல் திருடு போய்டுச்சு. அப்போ, தலைமைப் பொறுப்புல இருந்து கோயிலை நிர்வகிச்சுக்கிட்டு வந்த கே.எஸ். கங்தாதரன் ஐயாவோட ஆலோசனைப்படி அம்மனோட நகைகளை உருக்கி ஒரே நகையா செய்றதுன்னு முடிவெடுத்தோம். அம்மனோட தாலி உட்பட 23 கிராம் தங்கம் இருந்துச்சு. அதை கல் அட்டிகையா செய்தோம். அட்டிகையோட எடை 27 கிராம் வந்துச்சு. கல் கூடவே செய்கூலி அது இதுன்னு 11,000 வரை செலவாச்சு. அந்த செலவை என்னோட நன்கொடையா கொடுத்தேன்.

♦️அடுத்ததா அம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்தினது. அவரோட பேரு ராமகிருஷ்ண ஐயர். டெல்லியில இருக்குற காத்தாயி அம்மனோட பக்தர். அவர் காத்தாயி அம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்தணும்னு ஆசைப்பட்டு, தன்னோட பங்களிப்பா 10,000 ரூபாய் தர்றேன்னு சொன்னார். கும்பகோணத்திலிருந்து கவசம் செய்றவங்களை வரவெச்சு அளவெடுத்து நல்லபடியா செய்து முடிச்சோம். இது நடந்தது 2017-ல. அப்போ ஒரு கிராம் வெள்ளியோட விலை 37 ரூபா 50 காசு. மொத்தமா 1கிலோ 800 கிராம் வெள்ளி தேவைப்பட்டுச்சு. 70,000 வரை செலவாச்சு . ராமகிருஷ்ண ஐயர் கொடுத்த 10,000 போக மிச்சத்தை என்னோட நன்கொடையா கொடுத்தேன்.

♦️காத்தாயி அம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்தியாச்சு. அடுத்து, பச்சையம்மனுக்கும் மாரியம்மனுக்கும் கவசம் சாத்த முடிவெடுத்து நன்கொடை திரட்டுற முயற்சில இறங்கினோம். காத்தாயி அம்மனைப் பொறுத்தவரை எந்த நல்ல காரியத்தை தொட்டாலும் அது கடகடன்னு நடந்து முடிஞ்சுடும். கவசம் செய்ற விஷயத்திலும் அப்படித்தான்… பச்சையம்மனுக்கு கவசம் செய்ய 3 கிலோ 440 கிராம் வெள்ளியும் – மாரியம்மனுக்கு கவசம் செய்ய 1 கிலோ 192 கிராம் வெள்ளியும் தேவைப்பட்டுச்சு. 15 பேரோட பங்களிப்போட, 3 லட்சத்து 35, 285 ரூபாய் செலவுல அதையும் செய்து முடிச்சோம். இதுக்காக நன்கொடை கொடுத்தவங்க பெயரை கல்வெட்டுல பொறிச்சிருக்கோம்.

ரொம்ப வருஷம் முன்னே கோயிலைச் சுத்தி காம்பவுண்ட் சுவர் எழுப்பினப்போ கோயிலோட பின்பக்க சுவருக்கான செலவை என்னோட சித்தப்பா காசிராமன் ஏத்துக்கிட்டார்.

♦️2018-ல ‘கஜா’ புயல் தாக்கினப்போ கோயிலோட சில பகுதிகளும், காம்பவுண்ட் சுவரும் இடிஞ்சு விழுந்துடுச்சு. அதை மீண்டும் கட்டுற பொறுப்பை நான் ஏத்துக்கிட்டேன். முதல் நன்கொடையா ராஜேந்திரன்கிறவர் 4500 ரூபாய் கொடுத்தார். அப்படி ஆரம்பிச்சு என்னோட முயற்சியால 5 லட்ச ரூபாய் நன்கொடை திரட்டினேன். பல்வேறு தரப்பிலிருந்தும் நன்கொடைகள் வந்துச்சு. கோயிலோட அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஐயாவோட பங்களிப்பும் ஒத்துழைப்பும் பெரிய பலமா இருந்துச்சு.

அடுத்து வர்ற புயல் கியல் எதுவும் நாம் இப்போ கட்டுறதை அசைச்சுடக்கூடாதுன்னு முழுக்க முழுக்க தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்தினோம். நல்லபடியா காம்பவுண்ட் சுவரை கட்டி முடிக்க முடிஞ்சுது. இந்த விஷயத்துல நன்கொடைங்கிறதை தாண்டி, என்னால எந்தளவு முடியுமோ அந்தளவு உடல் உழைப்பைக் கொடுத்தேன்.

♦️எனக்கு அப்பா வழியில ரெண்டு அத்தைங்க. அதாவது, அப்பாவோட கூடப் பிறந்தவங்க. அதுல முத்த அத்தை பேரு நாகரத்தினம். அவங்களோட கணவர் பேரு சந்தான ராஜகோபாலன். தமிழ் பண்டிட். புலவரும்கூட. பல வருஷம் முன்னாடி கோயில் நிர்வாகத்துல பொருளாளரா இருந்தவர். இன்னைக்கு காத்தாயி அம்மன் கோயில்ல இருக்குற சப்த கன்னியர் சிலையை நிறுவியவர் அவர்தான்! இப்போ அவருக்கு வயசு 80.”

திரு. அண்ணாதுரை அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள்…

📌 அண்ணாதுரையின் தாத்தா சீனிவாச முதலியார் வைத்திருந்த ஜவுளிக் கடை அந்தக் காலத்தில் சுற்றுவட்டத்தில் ரொம்பவே பிரபலமாம்.

📌 சீனிவாச முதலியாருக்கு 8 வாரிசுகள். 1. நாராயணசாமி, 2. நாகரத்தினம், 3. கோபாலகிருஷ்ணன், 4. வசந்தா, 5. கல்யாணராமன், 6. காசிராமன், 7. மணிவாசகம், 8. ராஜேந்திரன்.

📌 சீனிவாச முதலியாரின் 2-வது மகன் கோபாலகிருஷ்ணனின் மகன்தான் அண்ணாதுரை. அண்ணாதுரையின் அம்மா பெயர் புனிதவள்ளி.

📌 கடந்த 20 வருடங்களாக (ஒன்றிரண்டு தவிர்க்கவே முடியாத காரணங்கள் தவிர்த்து) தவறாமல் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நாளில் மனைவியுடன் புறப்பட்டு காலை 8 மணிக்குள்ளாக காத்தாயி அம்மனை தரிசித்துவிட்டு அங்கிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் எட்டுக்குடி சென்று முருகனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

************************

“அடைந்த உயரங்கள் பெரிது; பெற்ற விருதுகள் ஏராளம்; நிறைவான வாழ்க்கை… அத்தனைக்கும் காரணம் காத்தாயி அம்மன்தான்!”

-மனம் திறக்கிறார் கல்வியாளர் டாக்டர். தில்லை சிவநேசன்

அருள்மிகு காத்தாயி அம்மன் குடிகொண்டுள்ள, கீழையூருக்கு அருகிலுள்ள மணக்குடியை பூர்வீகமாக கொண்ட முதலியார் குடும்பங்களில் பலருக்கும் கீழையூர் காத்தாயி அம்மன் குலதெய்வமாக இருப்பதை முன்பே தெரிவித்திருக்கிறோம்.

அந்த வரிசையில், பிரபல கல்வியாளர் டாக்டர். தில்லை சிவநேசன் அவர்களின் குடும்பத்துக்கும் காத்தாயி அம்மன் குலதெய்வமாக இருந்து அருள்பாலித்து வருகிறாள்.

சிவநேசன் அவர்களின் கல்வித் தகுதி, கல்வியாளராக அவர் வகித்த பொறுப்புகள், பணி ஓய்வுக்குப் பிறகு வகிக்கிற பொறுப்பு, அடைந்த உயரங்கள் எல்லாமே பெரிது.

‘ஆன்மிக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்’ என்று சொல்கிற அளவுக்கு தேவாரம், திருவாசகம், திருமுறை, திருமந்திரம் உள்ளிட்ட ஆன்மிக இலக்கியங்களின் மீது ஈடுபாடு கொண்ட சிவநேசன், ‘திருமூலர் விருது’, ‘சைவ சித்தாந்த ரத்தினம்’, ‘சித்தாந்த செந்நெறிக் காவலர்’, ‘செந்தமிழ் ஆகம அந்தணர்’ உள்ளிட்ட ஏராளமான கெளரவமிக்க விருதுகளுக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்களிடமிருந்து ‘திருமுலர் விருது’ பெறும் தில்லை சிவநேசன்

மலேசியப் பல்கலைக் கழகம் வழங்கிய ‘டாக்டர்’ பட்டம், ‘சிறந்த முதல்வர்’, மனிதருள் மாணிக்கம்’, ‘ஸ்டார் ஆஃப் ஏசியா’, ‘நெல்சன் மண்டேலா விருது’ என திரு. சிவநேசன் தன் கல்விப் பணிக்காக பெற்ற அங்கீகாரங்களும், விருதுகளின் பட்டியலும் மிகப் பெரியது.

இத்தனை உயரங்களைத் தொட்டிருந்தும், “எதுவுமே என்னால் சாத்தியமானதல்ல; அத்தனைக்கும் காரணம் காத்தாயி அம்மனின் அருள்தான்” என்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…

ஏழு வயதில் காத்தாயி தரிசனம்!

“எங்களுக்கு குலதெய்வம்கிற முறையில ஆறு மாசத்துக்கு ஒருமுறை இல்லேன்னா வருஷத்துக்கு ஒருமுறை காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போய்வர்றது காலங்காலமா எங்க குடும்ப வழக்கமா இருந்திருக்கு. எனக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும். அப்போ, அப்பாகூட கோயிலுக்குப் போய்வந்ததிலேருந்து எனக்கு நினைவிருக்கு…

‘நாம வாழற ஊருக்குள்ள பிள்ளையார் கோயில், அம்மன் கோயில் அது இதுன்னு இருந்தாலும் எட்டு பத்து கிலோமீட்டர் தாண்டி குலதெய்வ கோயிலுக்குப் போறது ஏன்?’ அப்படின்னு எனக்குள்ள கேள்வி வரும்.

குலதெய்வம் கோயிலில் முன்னோர்களின் ஆசி!

அப்பாகிட்டே அந்த கேள்வியைக் கேட்டா, ‘நாம எத்தனை சாமிய கும்பிட்டாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது; குலதெய்வக் கோயிலுக்கு போய் வர்றதையும் நிறுத்தக் கூடாது. குலதெய்வக் கோயில்ல, நமக்கு குலதெய்வமா இருக்குற சாமி மட்டுமில்லாம நம்மோட முன்னோர்களும் இருப்பாங்க. அந்த கோயிலுக்குப் போய்வர்றது மூலமா தெய்வத்தோட அருளும் முன்னோர்களோட ஆசியும் நமக்கு கிடைக்கும். அதெல்லாம் கிடைச்சாத்தான் குடும்பம் நல்லா இருக்கும்’னு குலதெய்வக் கோயிலோட முக்கியத்துவத்தை உணர்த்துவார்.

பூஜையறையில் புது நாத்துப் படையல்!

அப்போவெல்லாம் வீட்டு பூஜையறையில சாமிப் படமெல்லாம் இருக்காது. ஒரு சின்ன மாடமும் அதுல ஒரு காமாட்சி விளக்கும் இருக்கும். அவ்ளோதான். வீட்ல கல்யாணம், காது குத்துன்னு விசேஷம் வர்றப்போ அந்த அறையில குலதெய்வத்துக்கு படைக்கிறது வழக்கம். அது மட்டுமில்லாம, விவசாயம் பண்ற குடும்பம்கிறதால வயல்ல நாத்து நடவு செய்றப்போ அந்த நாற்றை வெச்சு குலதெய்வத்துக்கு படைப்பாங்க. ஆடி வெள்ளிக் கிழமைகள்லயும் வீட்ல குலதெய்வத்துக்கு படையல் போடுறதுண்டு.

கோயிலுக்குள்ளேயே பரிகார தேவதைகள்!

என்னோட சின்ன வயசுல கோயிலுக்குப் போய் வந்தப்போ சின்ன ஓட்டுவீட்லதான் காத்தாயி அம்மனோட தரிசனம் கிடைச்சுது. அப்போ கோயில்ல காத்தாயி அம்மனோட பச்சையம்மன், மாரியம்மன் இன்னபிற பரிகார தேவதைகளோட சிலைகளும் வரிசையா  இருந்துச்சு. ராமசாமி படையாச்சிங்கிறவர் பொறுப்பெடுத்து கோயிலைப் புனரமைச்சு கும்பாபிஷேகம் பண்ணப்போ, மூலவர் சன்னதில காத்தாயி அம்மனோட பச்சையம்மனையும் மாரியம்மனையும் பிரதிஷ்டை பண்ணிட்டு, மத்த சாமிகளை வெளியில வெச்சாங்க. முன்னைவிட கோயிலுக்கு புதுப்பொலிவு வந்துச்சு.

அந்தக் காலத்துலயிருந்தே கோயில்களோட விசேஷங்களுக்கு, திருப்பணிகளுக்கு நன்கொடை திரட்டுறப்போ எங்களால முடிஞ்சதை கொடுப்போம். ரெண்டு வருஷம் முன்னே கஜா புயல்ல காம்பவுண்ட் சுவர் இடிஞ்சு விழுந்துடுச்சு. அதை திரும்பவும் கட்டுறதுக்கு நன்கொடை திரட்டினப்போவும் பங்களிப்பை வழங்குற பாக்கியம் கிடைச்சுது.

எல்லாத்துக்கும் காரணம் காத்தாயி அம்மன்தான்!

நான் பிறந்தது எளிமையான கிராமத்துல; எளிமையான குடும்பத்துல! நிறைய படிச்சேன், நிறைவா படிச்சேன். பி.யூ.சி., எம்.இ.ன்னு பேருக்குப் பின்னாடி ஏகப்பட்ட டிகிரிகள்… கல்விப் பணியில கிடைச்சதெல்லாம் ரொம்பப் பெரிய பொறுப்புகள். மனசுக்கு நிறைவான வாழ்க்கைத் துணை. ரிட்டயர்மெண்ட்க்கு பிறகும் கல்விப் பணியில ஈடுபடுற வாய்ப்பு. பிள்ளைகளை நல்லபடியா படிக்க வெச்சு, கல்யாணக் கடமைகளையும் திருப்தியா முடிச்சாச்சு. எல்லாத்துக்கும் காரணம் காத்தாயி அம்மனோட அனுக்கிரகம்னுதான் சொல்வேன்!”

திரு. தில்லை சிவநேசன் அவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள்…

📌 பிறந்தது 12. 5. 1958-ல்
📌 தந்தை தில்லை விநாயகம் முதலியார்
📌 தாயார் நவநீதம் அம்மாள்
📌 8-ம் வகுப்பு வரை படித்தது மணக்குடியில்
📌 பாரதப் பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின்படி, 1300 மாணவர்களில் சிறந்த மாணவனாகத் தேர்வாகி கல்வி உதவித் தொகையுடன் மன்னார்குடி பின்ட்லே மேல்நிலைப் பள்ளியில் (Findlay higher secondary school) பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர், பின்னர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.யூ.சி. முடித்து பட்டதாரியானார்.
📌 பி.இ. மெக்கானிக்கல் படிப்பை காரைக்குடி அழகப்பன் செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், எம்.இ. (புரடக்ஷன் இன்ஜினியரிங்) படிப்பை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் முடித்தவர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி. (புரடக்ஷன் இன்ஜினியரிங்) முடித்து பணியில் இணைந்தார்.
📌 நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரியில் 1980-ம் ஆண்டு விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தவர், 2004-ல் காஞ்சீபுரம் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லுரியில் முதல்வராகப் பொறுப்பேற்றார். 2016-ல் அந்த பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் முதல்வராக கல்விப் பணியைத் தொடர்கிறார்.
📌 சிவநேசனுக்கு மத்திய – மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரில் கல்விப் பணியில் உயரிய பதவிகளை அலங்கரித்த பெருமையும் உண்டு. அந்த வகையில், அண்ணா பல்கலைக கழக உறுப்புக் கல்லுரிகளில் ஒன்றான அண்ணா பொறியியல் கல்லூரியின் ‘சிறப்பு அதிகாரி’யாகவும் பணியாற்றியிருக்கிறார். கல்விப் பணி நிமித்தம் பல வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.
📌 ‘உலக செங்குந்தர் பேரவை’ என்ற அமைப்பின் கல்வியல் மேலாண்மை மாநில அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
📌 திரு. சிவநேசனுக்கு திருமணமான ஆண்டு 1989. மனைவி எம். கலைவாணி. எம்.இ., எம்.எஸ்., எம்.பி.ஏ., என மூன்று பட்டப் படிப்புகளை முடித்துள்ள கலைவாணி, காஞ்சீபுரத்தில் அரசு உதவி பெறும் கல்லூரியொன்றில் மின்னணுவியல் துறைத் தலைவராகப் பணிபுரிகிறார்.
📌 சிவநேசன் – கலைவாணி தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அபிராம சுந்தரி மகப்பேறு மருத்துவராக பணியைத் தொடர்கிறார். இவருடைய கணவர் லோக வெங்கடேஷ் குழந்தை நல மருத்துவராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்; பெயர் சர்வேஷ் விநாயக்.
📌 இரண்டாவது மகள் கீர்த்தனா அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு, சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது கணவர் விஷால்ராஜ், கம்யூட்டர் இன்ஜினியராக பணியைத் தொடர்கிறார்.
📌 தன் செல்வாக்கின் மூலம் யாருக்கேனும் உதவ முடிந்தால் அதை மகிழ்ச்சியுடன் செய்யும் குணமுள்ள சிவநேசன், காத்தாயி அம்மன் கோயிலின் பூசாரி ரவியின் சகோதரருக்கு படிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கி, அவர் வேலையில் சேர தன் செல்வாக்கின் மூலம் வழிகாட்டியது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாக்கம்:- சு. கணேஷ்குமார், 99415 14078

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here