கே.ஜே. யேசுதாஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை! -சிவகுமார்.TD

0
312

கே.ஜே. யேசுதாஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

இந்திய மொழிகளிலும் அரபி, லத்தீன், ஆங்கில, ரஷ்ய மொழிகளிலும் ஐந்து தலைமுறைகளாக பாடி வருபவர் கே.ஜே. யேசுதாஸ். கட்டச்சேரி ஜோசப் யேசுதாஸ் என்பதன் சுருக்கமே கே.ஜே. யேசுதாஸ்.

இதுவரை 80000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.  மலையாளத் திரையுலகில் 1970, 1980 காலகட்டத்தில் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் பிறந்த யேசுதாஸ் அவர்களின் தந்தையும் கர்நாடக இசைப் பாடகர் மற்றும் நாடக நடிகர்தான். தந்தையே இவருக்கு குருவாகவும் இருந்துள்ளார்.

பள்ளிப்படிப்பை சரியாக படிக்க முடியவில்லை என்றாலும் ஆர்எல்வி இசைக்கல்லூரியில் ஞானபூசனம் இசைப்படிப்பை முடித்த பிறகு, கேஆர் குமாரசாமியின் ஸ்வாதி திருநாள் இசைக்கல்லூரியிலும், செம்மங்குடி சீனிவாச ஐயரிடமும் இசை பயின்றார். செம்பை வைத்தியநாத பாகவதரிடம்
இசைகுறித்த மேதாவிலாசங்களை கற்று தேர்ச்சி பெற்றார்.

இசையமைப்பாளர் பி.சீனிவாசன் அவர்கள் இசையில் 1961-ல் ‘ஜாதி பேதம் மத துவேஷம்’ என்ற பாடலேஇவர் பாடிய முதல் பாடல். அதன்பின்னர் புகழ்பெற்ற பாடகி சாந்தா நாயருடன் பாடிய ‘அட்டென்ஷன் பெண்ணே அட்டென்ஷன் ‘பாடல் மிகவும் புகழ் பெற்றது.

திருப்புமுனை தந்த படம் பார்மா என்ற மலையாளத் திரைப்படத்தில் தேவராஜன் இசையில் பாடிய பாடல்கள் ஆகும். மேலும் பி.வேணு இயக்கிய உத்தியோகஸ்து என்ற படத்தில் பாபுராஜ் இசையில் பாடிய பாடல்களும் புகழ் பெற்றது.

தமிழில் எஸ் பாலசந்தர் இயக்கத்தில் பொம்மை படத்தில் பாடியிருந்தாலும் வெளிவந்த முதல் திரைப்படம் கொஞ்சும் குமரி படம். இதற்கு இசை வேதா அவர்கள்.1965 ரஷ்ய நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக பாடல்கள் பாட அழைக்கப்பட்டார்.மலையாள திரையுலகில் பிரேம் நசீர், சலீல், ஜேசுதாஸ் மூவரும் 1970 ல் புகழின் உச்சியில் பெருமை பெற்றார்கள். அதே ஆண்டு யேசுதாஸ் கேரள சங்கீத நாடக அகாதமி யின் தலைவராக இளவயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னிந்திய திரையுலகில் வெற்றி கொடி நாட்டி புகழ் பெற்ற பிறகு 1970 களிலேயே பாலிவுட் திரைப்படங்களில் பாடத்துவங்கினார்.

ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற படத்தில் முதலில் பாடினாலும் சோட்டி சி பாத் என்ற படத்தின் ‘ஜனேமன் ஜனேமன்’ என்ற பாடல் முதலில் வெளிவந்து புகழ்பெற்றது.தொடர்ந்து இந்தி திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்கள் அமிதாப் ஜிதேந்திரா உள்ளிட்ட அனைவருக்கும் சலீல்சௌதுரி,பப்பிலகரி ராஜ்கமல் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

யேசுதாஸ் அவர்கள் எட்டு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். 43 முறை மாநில அரசு விருதுகளும், ஐந்து முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளும் 1977 ல் பத்மஸ்ரீ விருது,2002 ல் பத்மபூஷன் விருது,2017 ல் பத்மவிபூசன் விருதும் இந்திய அரசால் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல் 1999-ல் யுனெஸ்கோ நிறுவனம் இவருக்கு இசை மற்றும் அமைதிக்கான சாதனை விருது வழங்கியது. யேசுதாஸ் கிறிஸ்துவராக இருந்தாலும் இந்து மதத்தின் மீதும் இந்து மதக் கடவுள்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

மாலை அணிந்து வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று  வழிபட்டு வருகிறார். இன்றும் சபரிமலையில் ஒலிக்கப்படும் ஹரிவராசனம் என்ற பாடல் தேவராஜன் இசையில் இவர் பாடிய பாடலேயாகும்.

சிவகுமார்.TD

தொடர்ந்து தனது பிறந்த நாளின் போது கொல்லூர் மூகாம்பிகை கோயில் சந்நிதி சென்று வழிபடுவதுடன் சரஸ்வதி தேவியின் கீர்த்தனைகளை தாய் மூகாம்பிகை முன்பாடி கச்சேரி செய்துவருகிறார்.மலையாள படவுலகில் முதல் ஸ்டீரியோ இசை தட்டுகள் இவருடைய தரங்கனி இசைக்கூடம் மூலம் தான் வெளியானது.தரங்கனி இசைப்பதிவு கூடம் கேரளா, சென்னை,
அமெரிக்கா என்று நிறுவப்பட்டுள்ளது.

இவருடைய மகன் விஜய் யேசுதாஸும் பாடகராக பணியாற்றி வருகிறார்.
யேசுதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here