விவேக், தேவயானி நடித்து விரைவில் வெளிவரவிருக்கிற படம் ’எழுமின்.’ தற்காப்புக் கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குநர் விபி. விஜி. சமீபத்தில் வெளிவந்த ’உரு’ படத்தை தயாரித்தவர் இந்த விஜி.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
விஷால் பேசும்போது, ‘’நான் ஆக்ஷன் ஹீரோன்னு சொல்லிக்க வெட்கப்படறேன். இந்தப் படத்துல பசங்க கலக்கி இருக்காங்க. குழந்தைங்க எல்லாரும் தற்காப்பு கலைகள் கத்துக்கணும். முக்கியமா குட் டச், பேட் டச் எதுன்னு சொல்லி தர ணும். இந்த பட நிகழ்ச்சிக்கு நான் வர்றதைவிட ஜாக்கிசான் வர்றதுதான் பொருத்தமா இருக்கும். அந்தளவு இந்த பசங்க என்ன இன்ஸ்பையர் பண்ணிருக்காங்க.
விவேக் உண்மையை தைரியமா பேசுவாரு. எலக்சன்ல நின்னா கண்டிப்பா எம் எல் ஏ ஆயிடுவாரு. இந்த படத்துக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க. பசங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் கத்துக் கொடுங்க’ ’ என்றார்.
சிம்பு பேசும்போது, ‘’விவேக் சார் சின்ன பசங்கள ஹீரோவாக்கி அவங்க பின்னாடி நின்னு இந்த படத்த கொடுத்திருக்கார். விவேக் ஒரு படத்துல நடிக்கும் போது ஒருத்தர ஒரு சீன் நடிக்க கேட்டேன். அவர் உடனே சரி என்று சொன்னார். அப்படி அவர் சொல்லலனா சந்தானம்னு ஒருத்தர் வந்திருக்க முடியாது. இந்த படத்துல நடிச்ச பசங்கலாம் அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லனா நீங்க வந்திருக்க மாட்டீங்க. நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிக்க கத்துக்க தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். ஆனா அங்க யாரு மொதல்ல ஆன்சர் பண்றாங்கனு தான் பாக்குறாங்க. பேரண்ட்ஸ்கிட்ட ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ அந்த திறமைய வளர்த்து விடுங்க’’ என்றார்.
விவேக் பேசும்போது, ‘’எனக்கு நல்லது செய்யணும்னு விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோரை கூப்பிட்டேன். ஆனா எல்லாரும் சேர்ந்து என்ன அரசியல்ல கோர்த்து விடுறாங்க. தமிழ்நாட்டுல கொடி தான் பிரச்சினை. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க. எழுமின் வார்த்தை சைனீஷ் மாதிரி இருக்குனு சொல்றாங்க. சிலர் “ஏழுமீன்”னு படிக்கிறாங்க. தமிழ் வார்த்தை கூட தெரியாம இருக்காங்க. சமூகத்தில் விளையாட்டுல திறமை இருந்தும் முன்னேறி வர முடியாம இருக்காங்க. அவங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்’’ என்றார்.
விழாவில் நடிகர் உதயா பேசும்போதும் விவேக் அரசியலுக்கு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.