‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என இரண்டு பிட்டுப் படங்களை இயக்கிய சன்தோஷ் ஜெயகுமாரிடமிருந்து ஒரு witடுப் படம்! அது ஹிட்டுப் படமும்கூட!

ஆயிரம் பொய் சொல்லியல்ல, தனக்கு மறதிப் பிரச்னை இருக்கிறது என்கிற ஒரேயொரு உண்மையைச் சொல்லாமல் மறைத்து தனக்கு பிடித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறார் ஹீரோ. அதனால் அவர் எப்படிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை.

‘பலே பலே மகாதிவோய்’தெலுங்கு படத்தின் ரீமேக்.

காதலியை ஒரு இடத்துக்கு வரச் சொல்லிவிட்டு அதை மறந்துவிடுவது, கார் ஓட்டும்போது போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு எப்படி போய்ச்சேர்வது என்பதை மறந்துவிட்டு ஊரெல்லாம் சுற்றித் திரிவது… இப்படியொரு விநோதமான Attention deficiency syndrome பிரச்னையில் சிக்கித்தவித்து தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் கெட்டப் பெயரை சம்பாதித்தாலும் ஹேப்பியாக வாழ்கிற கதாபாத்திரம் ஆர்யாவுக்கு. எந்தவித அலட்டலுமின்றி இயல்பாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார்!

கோதுமைப் பால் நிறத்தில் செழுமையாய் இருக்கிறார் சாயிஷா. தமிழ் சினிமாவில் ஹீரோவைக் காதலிக்கும் ஹீரோயினுக்கு என்னென்ன வேலை கொடுப்பார்களோ அந்த வேலைகள்தான் இவருக்கு. கொடுத்தவேலையைச் செய்ததில் குறையேதுமில்லை!

ஆர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், அப்பாவாக ஆடுகளம் நரேன்,நண்பராக சதீஷ், சாயிஷாவின் அப்பாவாக சம்பத் இவர்களோடு இன்னபிற நடிகர் நடிகைகள் அத்தனைப் பேரும் தங்கள் நடிப்புப் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

பாலமுரளி பாலுவின் இசையில், காட்சியாக பார்க்கும்போது ரசிக்கும்படியிருக்கின்றன பாடல்கள்!

‘எதையாவது செய்து சிரிக்க வைக்க வேண்டும்’ என தீர்மானித்துவிட்டால் தமிழ் சினிமா இயக்குநர்கள் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படவே மாட்டார்கள். சன்தோஷ் ஜெயகுமாரும் அதே ரகம்! இருந்தாலும் கதைப்படி, ஹீரோ தனக்கிருக்கும் மறதிப் பிரச்னையால் சிக்கித் தவிப்பதை எந்தளவு முடியுமோ அந்தளவு காமெடியாக காட்சிப்படுத்தும்படி சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து ரசித்துச் சிரிக்க வைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here