நிலவில் கால்தடம் பதித்த முதல் மனிதன் எனும் பெயர் பெற்ற நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பயோபிக் கதை.ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் எனும் புத்தகத்திற்கு திரைக்கதை வடிவத்தை கொடுத்து மனிதனின் முதல் நிலவுப் பயணத்தை நம் கண்முன் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் டேமியன் சஸெல்.
உலகின் அனைத்திலும் முன்னோடியாக திகழ வேண்டும் அதுவும்,தன் எதிரி நாடான ரஷ்யாவைத் தோற்கடிக்க வேண்டும் என்னும் விபரீத ஆசையினாலே நிலவுக்கு மனிதனை அனுப்பத்துடிக்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த விஷப்பரிட்சைக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தச் சோதனை ஆரம்பித்த நாளிலிருந்து நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கும் பல தடைகளும், தடங்கல்களும் வந்த வண்ணம் இருக்க அதனை முறியடித்து நீல் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவுப் பயணத்தை சாத்தியப்படுத்தினார் என்பதே படத்தின் முழுக்கதை.
ரையன் காஸ்லிங், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகின்றார். தன் குடும்பம், நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி என மாறுபட்ட ஆர்ம்ஸ்டார்ங்கின் மனோபாவத்தை தனது ஸ்டாராங்கான நடிப்பில் பிரதிபலித்துள்ளார் ரையன் காஸ்லிங்.இவரின் மனைவியாக கிளாரி ஃபை, விண்வெளி ஆராய்ச்சியில் ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமோ? என பதட்டத்துடன் தன் மகனுடன் தவிக்கும் காட்சிகள் நம் மனதை படபடக்கவிடுகிறது.
இரண்டாவதாக நிலவில் காலடி வைத்த ஆல்ட்ரின் கேரக்டரில் கோரி ஸ்டோல், ஏர் ஃபோர்ஸ் ஆஃபிஸராக கிளார்க் என படத்தில் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் நடிப்பால் நிலவுப் பயணத்தை சுவாரசியப்படுத்துகின்றனர்.
மெல்லிய காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கின்றன. அத்துனை காட்சிகளிலும் ஆடியன்ஸை இசையுடன் இணைத்துவிடுகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின். அமெரிக்காவின் முதல் நிலவுப் பயண அனுபவங்களை லாவகமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சாண்ட்கிரின்.
புத்தகத்திலும், கதையாகவும் கேட்ட நீல் ஆர்ம்ஸ்டார்ங்கின் வரலாற்றை திகட்டாத அனுபவமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் டேமியன் சஸெல்.அறிவான கதையுடன் நிறைவான சயிண்டிபிக் படம். மிஸ் பண்ணாதீங்க.