ஒரே இடத்தில் 100 மூலிகைகள்; சென்னையிலேயே கிடைக்கிற ஆச்சரியம்! -கண்ணகி ராஜகோபாலின் மூலிகைப் பண்ணை ஒரு விசிட்

0
7053

ஒரே இடத்தில் 100 மூலிகைகள்; சென்னையிலேயே கிடைக்கிற ஆச்சரியம்! –கண்ணகி ராஜகோபாலின் மூலிகைப் பண்ணை ஒரு விசிட்

 

”இன்னைக்கு யாரைப் பாத்தாலும் சுகர், பிபீ அது இதுன்னு பிரச்னையோடத்தான் இருக்குறாங்க. பெரிய பெரிய வியாதியெல்லாம் மனுஷங்க உடம்புக்குள்ள ரொம்ப ஈஸியா வந்துடுது.

எல்லாமே ‘லைப் ஸ்டைல்’னு சொல்லப்படற நாம வாழற வாழ்க்கை முறையாலதான் வருது.

வியாதின்னு வந்துட்டா குணப்படுத்த ஆயிரம் ஆயிரமா, லட்ச லட்சமா செலவு பண்றோம். அதெல்லாம் அநாவசியம்க. நம்ம நாட்டு மூலிகைகளே போதும்” என்கிறார் சென்னை மாடம்பாக்கத்தில் மூலிகைப் பண்ணை வைத்திருக்கும் கண்ணகி ராஜகோபால்.

அவரைச் சந்தித்தோம்.

‘‘நம்ம வீட்டைச் சுத்தி எத்தனையோ மூலிகைங்க செடி, கொடி, மரமா இருக்கு. ஆனா, அதெல்லாம் நமக்கு எந்தெந்த விதத்துல உதவும்னு புரியாம, தெரியாம விட்டுடறோம்.

ஒரு விஷயம் தெரியுமா? உலகத்திலேயே எல்லா மூலிகைகளும் கிடைக்கிறது தமிழ் நாட்லதான். இது சித்தர்கள் வாழ்ந்த பூமி. அவங்களாம் எத்தனையோ மூலிகைப் பொக்கிஷங்களை நமக்கு அடையாளம் காட்டிட்டுப் போயிருக்காங்க. நாமதான் மறந்துட்டோம்” என ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார்.

மூலிகைப் பண்ணை உருவாக்கணும்னு எப்படி தோணுச்சு?
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கறது நல்லதுனு சொல்வாங்கள்ல. அதேதான் என் விஷயத்துல நடந்துச்சு. ஆமா, எனக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளுக்கு சிகிச்சையா மூலிகை மருந்துகளை சாப்பிட ஆரம்பிச்சேன். பலநாள் கஷ்டம் கொஞ்சநாள்லயே சரியாச்சு. மூலிகை மருந்துகள் மூலமா குணமாகறது நிரந்தரத் தீர்வும்கூட. அன்னிலேருந்து மூலிகைகள் பத்தி தேடித்தேடி படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

காடு, மலைன்னு அலைஞ்சு திரிஞ்சு மூலிகைச் செடி, கொடிகளைத் தேடிப் பிடிச்சேன். இப்போ என்கிட்டே நூற்றுக்கணக்கான மூலிகைகள் இருக்கு” என்று சொன்னபடியே மூலிகைப் பண்ணையைச் சுற்றிக் காட்டினார்.
மூலிகைகளுக்காக காடு, மலை அலையறதெல்லாம் கூட வேண்டாம். நம்ம வீட்டைச் சுத்தியிருக்கிற செடி, கொடிகளோட அருமைய புரிஞ்சுக்கிட்டு வளர்த்தாலே போதும்.
நம்ம முன்னோர்கள், சித்தர்கள் பல மூலிகைகளோட அருமை பெருமைகள் பத்தி சொல்லிருக்காங்க. அதே நேரம் பல மூலிகைகள் பத்தி வெளிப்படையா சொல்லலை. அதுவும்கூட நமக்கு மூலிகைகள் பத்தி அவ்வளவா தெரியாம போனதுக்கு காரணம்.

இப்போவும் ஒண்ணும் கெட்டுப்போகல. இந்த மூலிகை இன்ன நோய்க்கு தீர்வா இருக்கும்னு நமக்குத் தெரிஞ்சவரை அந்த மூலிகைகளை பாதுகாத்து நம்ம வீட்லேயே வளர்க்கலாம். அதைத்தான் நான் செய்றேன்” என்கிறவர்,

தனது பண்ணையில் கற்பூரவல்லி, தூதுவளை, துளசி போன்ற எளிதில் பலருக்கும் கிடைக்கிற, பலரும் வளர்க்கிற மூலிகைகளில் இருந்து அரியவகை மூலிகைகள் மற்றும் மரங்களையும் வளர்த்து வருகிறார்.

மூலிகைச் செடி, கொடிகள் வளர்த்து விற்பனை செய்வதோடு மூலிகைகளைக் கொண்டு ஆரோக்கியத்துக்கு உகந்த பல்வேறு பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
மூலிகை மூட்டுவலி தைலம், மூலிகைப் பல்பொடி, மூலிகை பேன்மருந்து, மூலிகை ஃபேஸ்பேக், கோபுரம் தாங்கி கூந்தல் தைலம் என இவரது தயாரிப்புகளின் பட்டியல் நீள்கிறது.
புன்னை, ருத்ராட்சம், திருவோடு, மனோரஞ்சிதம், கடம்பம், மருதம், பாதிரி, முள்ளுசீத்தா, பன்னீர் மரம், வெப்பாலை போன்றவையும் இவரது பண்ணையில் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் வளர்ப்பது எளிதுதான்’’என்கிறார்.

தன்னை தொடர்பு கொள்பவர்களுக்கு மூலிகைகளை வளர்ப்பதற்கு தகுந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் கண்ணகி ராஜகோபால். தொடர்புக்கு:- 72995 49068

கண்ணகி ராஜகோபால் எடுத்துச் சொன்ன மூலிகைகள் சிலவற்றின் மருத்துவப் பயன்கள்:

*தழுதாழை – இது 84 விதமான வாதத்தை குணப்படுத்தும்

*கருஊமத்தை – நாய்கடிக்கு நல்ல மருந்து

*கரிசலாங்கண்ணி – கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும்

*சித்தாமுட்டி – மூட்டுவலி குணப்படுத்தும்

*பேய்விரட்டி – விஷபூச்சிகளை விரட்டும்

*நிலவேம்பு – விஷக்காயச்சலை குணப்படுத்தும்

*நித்யகல்யாணி – புற்றுநோய் வராமல் தடுக்கும்

*தொட்டால் சுருங்கி
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

*வல்லாரை – மூளையை பலப்படுத்தும்

*நீர்பிரம்மி – ஞாபக சக்தியை அதிகரிக்கும்

*பூனைமீசை – சிறுநீரகத்தை பலப்படுத்தும்

*ஆடாதொடை – இருமலை தடுக்கும்

*தூதுவளை – சளியை கரைக்கும்

*சிருகன்பீளை – சிருநீரக கற்களை கரைக்கும்

*அருவதாம்பச்சை – மாந்தத்தை தடுக்கும் பாம்புகள் வராது

*வசம்பு – நோய்கிருமிகளை அழிக்கும்

*ஓரிதழ் தாமரை – ஆன்மையை பெருக்கும்

*விழுதி – கட்டிகளை கரைக்கும்

*ஆடுதீண்டாபாளை – பாம்பு கடியை குணப்படுத்தும்

*யானைநெருஞ்சில் – உடல் உட்பகுதியில் உள்ள சூட்டை தணிக்கும்

*நத்தைசூரி – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

*சிவனார் வேம்பு – சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை குணமாக்கும்

*கோபுரம் தாங்கி – புழுவெட்டை தடுக்கும்

*விஷ்ணு கிரந்தி – காய்ச்சலை தணிக்கும்

*நேத்திர மூலி – கண்நோய்க்கு மருந்து

*கள்ளிமுளையான் – பசியை உண்டாக்கும்

*சர்பகந்தா – மனநோய்க்கு நல்ல மருந்து

*சித்திரமூலம் – வலியை போக்கும்

*பொடுதலை – இதயத்தை பாதுகாக்கும்.

கண்ணகியின் பண்ணையிலிருக்கும் மூலிகைச் செடிகள் & கொடிகள்: அருவதாம்பச்சை, ஆகாயத் தாமரை, நிலவேம்பு, பூனைமீசை, கரிசலாங்கண்ணி, நித்திய கல்யாணி, பெப்பர் மின்ட், கற்பூரவல்லி, ஆடாதொடா, இன்சுலின் செடி, பேய்விரட்டி,தொட்டாச்சுருங்கி, ரம்பை, நாட்டு வல்லாரை, மலை வல்லாரை, ஆதொண்டை, உப்பிலாங்கொடி, பவளமல்லி, நத்தைசூரி, வெள்ளை மந்தாரை, கற்கரக்கி, வெள்ளருகு, பிரண்டை, இலைபிரண்டை, இரட்டை பிரண்டை, செண்பகம் ஆரஞ்சு, ஆவாரை, நீலநொச்சி, கருந்துளசி, லெமன்கிராஸ், கல்யாண முருங்கை, நீர்பிரம்மி, புளியாரை, அவுரி, கிரந்திநாயகம், பொடுதலை, வசம்பு, மனத்தக்காளி, கூவைக்கிழங்கு, எலும்பொட்டி, சிவப்புக் கொடிவேலி, வெண்கொடி வேலி, குருவிச்சை , நஞ்சு முரிச்சான், யானைத் திப்பிலி, கருஊமத்தை, சர்க்கரைத் துளசி, தழுதாழை,சிறுகுரிஞ்சான், கண்டங்கத்திரி, விஷ்ணு கிரந்தி, ஆடுதீண்டாபாளை, ரணகள்ளி, யானை நெருஞ்சில், சிவனார் வேம்பு, விராளி, ஓரிதழ்தாமரை, கோபுரம் தாங்கி, கேசவர்த்தினி, நாகமல்லி, கள்ளிமுளையான்,நிலப்பனை, சர்பகந்தா, அஸ்வகந்தா, சித்தாமுட்டி, நேத்திரமூலி, கொடிசம்பங்கி, நிலசம்பங்கி, திருகுகள்ளி, ஈஸ்வரமூலி.

கண்ணகியின் பண்ணையிலிருக்கும் மரங்கள்: வில்வம், மகாவில்வம், புரசை, ருத்ராட்சம், திருவோடு, சீதா அசோகா, கருங்காலி, வெண்நாவல், மகிழம், கடம்பம், பாதிரி, செண்பகம், முள்ளுசீத்தா, ராமசீத்தா, வஞ்சி, வன்னி, பாரிஜாதம், மனோரஞ்சிதம், பட்டை மரம், ஜாதிக்காய் மரம், சொர்க்கம் மரம், வெப்பாலை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here