நோயைக்  குணப்படுத்துவதை விட சிகிச்சை என்கிற பெயரில் மருந்துகளை விற்பனை செய்வதிலேயே மருத்துவ  உலகம் குறியாக இருக்கிறது. மருந்துகளுக்கு அடிமைப்படுத்தி வியாபாரம் செய்வதே இவர்களின் நோக்கம் . குறிப்பாக நீரிழிவு நோய்க்கான மருந்து வியாபாரம் அமோகமாக இருக்கிறது. அந்த மருந்துகளில் எவ்வளவோ தடைசெய்யப்பட்ட மூலப்பொருள்கள் உள்ளன. ஆனால் யாரும் இது பற்றி கண்டு கொள்வதில்லை. இது போன்ற மருத்துவ உலகின் முறைகேடுகளை உண்மையை உலகுக்கு சொல்லவரும் படம்தான் ‘ஒளடதம் ‘.
 இப்படத்தை தனது  ‘ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ்’ சார்பில் கதை எழுதி தயாரித்துள்ளதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் நேதாஜி பிரபு. சமைரா நாயகியாக நடித்துள்ளார் . இவர்களோடு வினாயக்ராஜ், பாலாம்பிகா, முரளி, சந்தோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் ரமணி. ஒளிப்பதிவு ஸ்ரீரஞ்சன் ராவ்,இசை இசையரசர் வி.தஷி. சண்டைப் பயிற்சி தேவா, டிசைன்ஸ் உதயா,
படம் பற்றி நேதாஜி பிரபுவிடம் கேட்டால் ” நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். சினிமா ஆசை விடவில்லை, வந்து விட்டேன். ஆனால்  வழக்கமான படமாக நாமும் ஒரு படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன்.  உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்க நினைத்தேன். இயற்கை வழிகளில் உண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே  நம் முன்னோர்கள் ஒளடதம் குறை, ஒளடதம் தவிர் என்றார்கள்.
அதன் பின்னணி மருந்துகளை அதிகம் உண்ணக்கூடாது என்பதுதான். ‘ஒளடதம் ‘ என்கிற பெயரில் மருத்துவம் பற்றி  எடுக்க ஒரு  கதை தேடினேன். அப்போது மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும்படியான ஒரு மோசடி பற்றிய செய்தி 2013 மே14-ல் வந்திருந்தது.
இது பற்றி 2016 ஆண்டிலும்  பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் பார்த்தேன். தவறான மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்த அந்தச் செய்தி காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டது. ஆனால் அந்த மருந்து வியாபாரம்  இன்னும் கேட்பாரில்லாமல் தொடரவே செய்கிறது. இது பற்றியெல்லாம் ஒளடதம் படம் பேசுகிறது. படம் கமர்சியல் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதற்காக ஒரு நிஜமான மருந்து கம்பெனியில் 8 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இப்படம் சமூகத்தில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்கிற நேதாஜி பிரபு
படத்தை விளம்பரப்படுத்த திட்டமொன்று வைத்துள்ளாராம். அது பற்றியும் நம்மிடம் பகிர்ந்தார்…
”இப்போது எவ்வளவோ படங்கள் வருகின்றன. ஆனால் அது நல்ல படம் என்று தெரிவதற்குள் அதன் ஆயுள் முடிந்து விடுகிறது. நான் ஒரு திட்டத்தில் உள்ளேன். ’ஔடதம்’ என எழுதப்பட்ட பேனாக்களை திரையரங்கு திரையரங்காகச் 5000 பேனாக்கள் வீதம் 3 லட்சம் பேனாக்களைத்  தரப்போகிறேன்’’ என்கிறார்,நேதாஜி பிரபு.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று விரைவில் திரையிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்பதும் டிரெய்லர் மற்றும் ‘ஔடதம்’ 3லட்சம் பேனாக்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் இறுதியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது என்பதும் படம் குறித்த கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here