‘பிக் பாஸ் 2’ முதல் எபிசோட் ஒரு பார்வை!

-எழுத்தாளர் சரவணகார்த்திகேயன்

1) முதல் சீசனில் கமல் ஹாசன் முகத்தில் மெல்லிய முதுமை தெரியத் தொடங்கி இருந்தது. இம்முறை உடலசைவுகளிலும். (அவர் பிக்பாஸ் வீட்டைச் சுற்றிக் காட்டிய / பார்த்த போது).

2) யாஷிகா ஆனந்த் லேசாய் ஷ்ருதி ஹாசன் சாயல் (அல்லது அந்த உடையும் மேக்கப்பும் ஏமாற்றுகிறதா!) என்பதாலேயே அவர் மீது தனி வாஞ்சை வந்து விடுகிறது. வயது பத்தொன்பது முடிந்து பதினெட்டு தொடங்குகிறது என்கிறார்கள். இருட்டு அறையில் முரட்டுக்குத்து நடித்திருந்தாலும் “ஆண்” என்ற தமிழ்ச் சொல்லுக்கே அர்த்தம் தெரியாத அப்பாவியாய் இருக்கிறார். “கொஞ்சம் கொஞ்சம்” என அவர் கொஞ்சிக் கொஞ்சி உச்சரிப்பதையே ஆபாசமாய் கேலி (டேனி) செய்யப்படுமளவு innocence. செயல்கள் சப்பையாகத் தான் இருக்கிறது இதுவரை. பார்ப்போம்.

3) பொன்னம்பலம் எந்த தைரியத்தில் “ஜெய் ஸ்ரீராம்” என்றெல்லாம் சொல்லி தமிழகத்தில் ஜெயிக்க முடியும் என நம்புகிறார்! (கிடைக்கும் சந்தர்ப்ப‌ங்களிலெல்லாம் அடிக்க வேண்டும் என காலா ரஞ்சித் சொல்லிக் கொடுத்திருக்கிறார்!) அவர் தத்துவமெல்லாம் பேசிக் கொஞ்சம் பாவனை செய்வதாய்ப் படுகிறது. போன முறை சினேகனைப் போல். கொஞ்சம் கஞ்சா கருப்பும்.

4) மஹத். ஃப்ளர்ட் செய்யத் தான் உள்ளே வந்திருக்கிறேன் என்று அறிவித்து விட்டே வந்திருக்கிறார். ஆனால் ஆரவ் போல் செயல் வீரனாய்த் தெரியவில்லை. ஹரீஷ் போல் அப்புராணியாய்ப் படுகிறார்.

5) டேனி. இவரைச் சுற்றி தான் முதல் சில எபிஸோட்கள் நகரும் என ஊகிக்கிறேன். ஏனெனில் விவகாரமாய்ப் பேசுகிறார். அடுத்து வருவது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் பேச, ரெண்டும் இல்லாம வந்தா என்கிறார். Rude. ஏடாகூடமாய்ப் பேசி நிச்சயம் சண்டை செய்வார். பில்டப் ஜாஸ்தி என்றாலும் அடிப்படையில் பயந்தாங்கொள்ளி எனப்படுகிறது.

6) சாவியின் பேத்தியான ஆர்ஜே வைஷ்ணவி ஈர்க்கிறார். One of the potential candidates.

7) ஜனனி (ஐயர்) படங்களில் கூட இந்த மேக்கப், உடை, நடனம் காட்டியதில்லை. பத்து படங்களில் வரும் ரீச் பிக்பாஸில் வரும் என்பது புரிந்ததால் வந்திருக்கிறேன் என்பது பிடித்தது. சென்றாயன் ஆடச் சொன்ன போது நாசூக்காய்க் கையாண்ட மென்மையும் நன்று.

8 ) ஆனந்த் வைத்தியநாதன். ஹெவி டோஸ் ஃபிலாசஃபி. அவர் எப்படி இந்த வீட்டாரோடு செட் ஆவார் என்பது தெரியவில்லை. தற்போது ஜோடியில்லை என்று சொன்னதும் லக்கி மேன் என்று சொன்ன போது பழைய (அசல்) கமல் எட்டிப் பார்த்தார்.

9) என்எஸ்கே ரம்யா தன்னைச் சரி செய்து கொள்வதற்காக வந்ததாகச் சொன்னார். ஊதாரி, ரவுடி ஹீரோவின் அம்மா (பொதுவாய் மனோரமா) கல்யாணம் செய்து வைத்தால் சரியாகி விடும் என்று சொல்வது போல் யாரைப் பார்த்தாலும் பிக்பாஸ் போய் திருந்தறேன் எனச் சொல்கிறார்கள். அதென்ன போதி மரமா! காயத்ரி எல்லாம் போன முறை 80 நாட்கள் உள்ளே இருந்து விட்டுத் தான் போனார். வெளியே வந்து இன்னும் தறுதலையாகத்தான் இருக்கிறார்!

10) சென்றாயன் தான் இந்த சீசனின் பரணி. நிறைய எண்டர்டெய்ன்மெண்ட் இருக்கிறது. இவருக்கும் பொன்னம்பலத்துக்கும் டேனிக்கும் இடையே சிக்கல் வரும் எனக் கணிக்கிறேன்.

11) ரித்விகா சொன்ன காரணமும் இயல்பாய் இருந்தது. பத்து மாதமாய்ப் படமில்லை என. கமல் அதற்குச் சொன்ன பதிலும் (உங்களுக்குமா!). எல்லோரும் உடலில் ரத்த சோகையாக இருப்பார்கள். ரித்விகா பேச்சிலேயே சோகையாக இருக்கிறார். மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல். ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தப்படுவதைப் பற்றிப் பயப்படுகிறார்.

12) மும்தாஜ் தோற்றம் மற்றும் பின்புலத்தில் மட்டுமல்ல, கேரக்டரிலும் நமீதாவை நினைவூட்டுகிறார். தனக்கு என்ன வருகிறதோ அதையே திருப்பிக் கொடுப்பேன் என்றார். அதை உள்ளே நிரூபித்தும் காட்டினார். சென்றாயன் நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்றதும் அப்ப ஆசீர்வாதம் செய்கிறேன் என்றார்.

13) மமதி சாரி தான் இப்போதைக்கு என் முதன்மை சாய்ஸ். வலுவான மனமும் தெளிவான புத்தியும் தென்படுகிறது. கடைசி வரை இருப்பார் என்று தோன்றுகிறது.

14) ஷாரிக் ஹாசன். தோற்றத்தில் மட்டும் ஆரவின் பிரதி. கமலா காமேஷ் என்றால் த்ரிஷா போல் இருப்பார் என நினைத்தேன். வல்லிய ஏமாற்றம்.

15) பாலாஜியின் நிறைய டைமிங் கமெண்ட்களை எதிர்பார்க்க முடியும். (தன் மனைவியை வரவேற்று அழைத்து வந்த சென்றாயனிடம் டூரிஸ்ட் கைட் மாதிரி ஆயிட்டான் என்றார்.) வையாபுரி போல் நெடுநாள் இருப்பார் வீட்டுக்குள். (முக்கியமான சந்தர்ப்பத்தில் கூட ஈரோடு மகேஷால் ஜோக் என்ற பெயரில் காட்டு மொக்கையைத் தான் போட முடிகிறது.)

16) முன்னாள் திருமதி பாலாஜியான நித்யா கொஞ்சம் பாசாங்கு போல் தெரிகிறார். ஆனால் பாதி வரையேனும் அவரை வைத்திருப்பார்கள். ஏனேனில் பாலாஜி உடனான ட்ராமாவுக்கு அவர் தேவை.

17) ஐஸ்வர்யா தத்தா குழந்தை போல் பேசுகிறார். குழந்தைகள் எப்போதும் சகிப்பதற்கரியர். அதுவும் நமக்குத் தெரியாத குழந்தைகள். அடித்து அனுப்பி விடுவார்கள். பெங்காலியும் தமிழும் ஒன்று என்று ஒரே போடாய்ப் போட்ட இடத்தில் சந்தேகிக்க வைக்கிறார். (கமல் தமிழர்களுக்கு எழுபது வருஷமாய் பெங்காலி தெரியும் – ஜன கன மன‌ – என்று சொன்னது கெத்து.)

18) இன்று மாலை நான் ஊகித்த‌து போலவே ஓவியா கெஸ்ட் மட்டுமே. ஓவியா இன்று கிடைத்த ஒரு நிமிட‌த்தில் கூட “டிப்ஸ் கொடுக்கத் தெரியாது, டிப்ஸ் கொடுக்க ஒன்றும் இல்லை” என்று அற்புதமாய்க் கோல் போட்டார். She is the real hero. அவருக்கு இணை எவரும் இல்லை. கமலின் ஈகோ சீண்டப்பட்டிருக்க வேண்டும். மறுத்து மெல்லிசாய் அதட்டினார் சிறுபிள்ளைத்தனமாய்.

19) ஓவியா உள்ளே நுழைந்த போது அங்கிருந்த‌ 16 ஜீவன்களில் ஒன்றாவது ஆத்மார்த்தமாக அவரை வரவேற்கும் என எதிர்பார்த்தேன். ம்ஹூம். ஒருவர் கூடத் தென்படவில்லை. அப்படி ஒருவர் இருந்திருந்தால் அவர் தான் இந்த சீசனின் ஓவியா என அடையாளம் தெரிந்திருக்கும். எல்லோரும் உள்ளே பயம் கிளம்பி அதிர்ச்சியில் இருந்தார்கள். ஓவியாவை அவர்கள் முன்பு எவ்வளவு ரசித்திருந்தாலும் இப்போது அவர் அவர்களுக்குப் போட்டியாளர். என்ன வினோதம்!

20) மமதி சாரி, ஆர்ஜே வைஷ்ணவி, ஜனனி ஐயர் இப்போதைக்கு என் டாப் மூன்று பேர். ஆனால் ஆர்மி ஆரம்பிக்குமளவு எவரும் இப்போதைக்கு ஒர்த் இல்லை.

எழுத்தாளர் சரவணகார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here