வாட்சப் வதந்திகளில் ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு’ என்று ஒருவரி வருவதுபோல் ‘அகவன்’ படத்தை ‘தமிழனா இருந்தா பாரு’ என்று தாராளமாகச் சொல்லலாம்.
கதாநாயகனின் அண்ணனை விசாரணைக்காக போலீஸ் கூட்டிப்போகிறது. எதற்காக கூட்டிப் போனார்கள் என்று விசாரிக்கப்போனால் போலீஸ் ஸ்டேஷனில் ‘அப்படி யாரையும் கூட்டிவரவில்லை’ என்று அலட்சியமாக பதில் வருகிறது. பின்னர் அந்த அண்ணனை பிணமாக கண்டெடுப்பது ஷாக். அவருக்கு என்ன நடந்தது?
கதாநாயகனும் தம்பி ராமையாவும் காட்டுக்குள் இருக்கும் பழங்காலத்துக் கோயிலொன்றில் பக்தர்களுக்கு மொட்டையடிக்கும் வேலையிலிருந்து பல்வேறு நற்பணிகளைச் செய்கிறார்கள். அவர்கள், இரவில் அந்த கோயிலைச் சுற்றி பேய் பிசாசு நடமாட்டம் இருப்பதை உணர்கிறார்கள். அதன் பின்னணியிலிருக்கும் மர்மங்கள் என்னென்ன?
தஞ்சை ராஜராஜசோழனைப் பற்றியும் அவன் கட்டிய உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெரியகோயிலைப் பற்றியும் ஆராய்ச்சி செய்கிறார் இளைஞர் ஒருவர். அவருடைய ஆராய்ச்சியை முழுமையடைய விடாமல் சிலர் சதி செய்கிறார்கள். அவர்கள் யார்? அந்த சதியில் சிக்கிய இளைஞருக்கு என்னவானது?
இதற்கெல்லாம் பதில் சொல்கிற ‘ஸ்கிரீன்பிளே’யில் காதல், காமெடி மசாலாவும் உண்டு. படத்தின் நீ…………ளம் 165 நிமிடங்கள். இயக்கம்: ஏபிஜி. ஏழுமலை
நாயகன் கிஷோர் ரவிச்சந்திரன், நாயகிகள் சிராஸ்ரீ, நித்யா ஷெட்டி, நரேன்… எல்லோரிடமிருந்தும் எளிமையான நடிப்பு! தம்பி ராமையாவின் காமெடி வழக்கம்போல்.
எனோதானோவென கடந்து போகிற படத்தின் முன்பாதியில் அங்கங்கே வைத்த சஸ்பென்ஸை பின்பாதியில் உடைத்துக் கொண்டே வருகிறபோது நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது விறுவிறுப்பான திரைக்கதை!
நாடு நன்றாக இருக்கவேண்டும், தன் காலத்துக்குப் பிறகும் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தஞ்சை ராஜராஜசோழன் வகுத்த பயனுள்ள தொலைநோக்குத் திட்டங்கள் / உலகில் பல்வேறு பகுதிகளுக்கு பரந்து விரிந்த அவனது ஆளுமையின் நீள அகலங்கள் / கோயில்கள் எதற்காக கட்டப்பட்டன, கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்குப் பின் இருக்கிற முன்னோர்களின் புத்திசாலித்தனம் / அந்தக் காலத்து ஓலைச்சுவடிகளில் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷம் இவற்றையெல்லாம் ஆதாரபூர்வமாக விவரித்திருப்பது சிறப்பு; நீங்கள் தமிழனாக இருந்தால் ஏற்படும் பெருமிதச் சிலிர்ப்பு!
சி. சத்யாவின் பின்னணி இசையும் பாடல்களும் பலம்.
பிரபலமான ஹீரோக்கள் நடித்திருந்தால் ‘அகவன்’ அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு பெரிய வெற்றியை எட்டியிருப்பான்.