ஐடி வேலைக்குச் செல்லும் பெண்கள் கார்பரேட் சுகத்திற்கு அடிமையாகி செய்யும் முட்டாள்தனத்தின் விளைவுகளை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் தாமிரா.ஆணுக்கு சமமாக சம்பாதிக்க வேண்டும் என பெண்கள் குரல் உயர்த்தும் இக்காலத்தில் தன் கணவன் சமுத்திரகனியை விட அதிகமாக சம்பாதிக்க ஆசைப்பட்டு அதற்கான முழுவீச்சில் ஈடுபடுகிறார் ‘ஜோக்கர்’ ரம்யா பாண்டியன்.
ஒரு குடும்பத்தில் இருவரும் வேலைக்குச் சென்றால் தன் குழந்தைகள் கவின்,மோனிகா இருவரின் குழந்தைப் பருவ வாழ்க்கைக்கு தேவையான அன்பினை கொடுக்க தவறிவிடுவோம் என எண்ணி ரம்யாவை வேலைக்குச் செல்ல வேண்டாம் என சமுத்திரகனி கேட்கும் போது அதனை மறுத்து அடம்பிடிக்கிறார் அந்த கார்பரேட் மனைவி ரம்யா.
தன் குழந்தைகளின் மீதுள்ள பாசத்தால் அந்த பொறுப்பை தான் ஏற்று வீட்டுடன் ஹவுஸ் ஹஸ்பண்டாக அடங்கிப்போகிறார் சமுத்திரகனி. அப்பாவாக சமுத்திரகனிக்கு இருக்கும் பக்குவம் ரம்யாவின் மனநிலையில் எட்டாமல் போக இருவருக்கும் இடைவெளி உண்டாகிறது. அதீத பணத்தாசையால் முட்டாள் தனமாக கார்பரேட் கடன் வலையில் சிக்குகிறார் ரம்யா.இதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? சமுத்திரகனி ரம்யாவை மீண்டும் ஏற்றுக்கொண்டாரா?என்பது கிளைமேக்ஸ்.
‘பசங்க’, ‘அப்பா’ படத்தின் அப்டேட் வெர்சனாகவே சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். குழந்தைகளின் ஆண் தேவதையாக சமுத்திரகனி இந்த படத்தில் பல இடங்களில் வசனம் இன்றி நடித்திருப்பது படத்தின் பிளஸ். அதீத அட்வைசும் இல்லை.
ஒருபக்கம் பேராசைக்காரியாக, மறுபக்கம் அன்பான அம்மாவாக நடித்திருக்கிறார் ஜோக்கர் ரம்யா பாண்டியன் .
‘தன் மகள் மோனிகாவிடம் தவறாக நடக்கும் ஆணை தண்டிக்கும் சமுத்திரகனியின் கோபம் அம்மாவாக ரம்யா பாண்டியனுக்கு வராமல் இருப்பது படத்தின் மைனஸ். கார்பரேட் ஊழியர்களாக இருந்தாலும் தவறு எனப்படும் பட்சத்தில் அவர்களுக்கும் தன்மானம் மிடுக்கிடும் என்பதே உண்மை.’
சுட்டிக்குழந்தைகளாக கவின்,மோனிகா படம் முழுக்க அப்பாவின் செல்லப்பிள்ளையாக வருகின்றனர். அதற்கு தகுதியான நடிப்பை கொடுத்திருக்கிறார் சமுத்திரகனி.கதையின் பலம் கூட்டும் கேரக்டரில் சுஜா வருணி. அளவுக்கு மீறி நடித்துக்கொட்டாமல் அளவாய் நடித்துள்ளார். இதேபோல் ராதாரவியும் படத்துக்கு பாஸிடிவ் எனர்ஜி கூட்டுகிறார்.
வேலை வெட்டி இல்லாமல்,அறந்தாங்கி நிஷா, அனுபமா குமார் ஆகியோருடன் சமுத்திரக்கனி செய்யும் சேஷ்டைகளை பார்த்து வயிறெரியும் இளவரசு பேசும் வசனங்கள் தவிர காமெடி என்று எதுவும் இல்லை. இந்த அப்பார்ட்மெண்ட் குழுவை நன்றாக உபயோகித்திருக்கலாம். முதலும் இடையுமாய் வந்துபோகிறார் காளி வெங்கட்.கார்பரேட்டின் சுயநல வில்லனாக அபிஷேக், வங்கியின் கட்டபஞ்சாயத்து வில்லனாக ஹரிஷ் பேரடி இருவருமே ஏதோ ஒரு விதத்தில் ரம்யாவை தொந்தரவு செய்கின்றனர். ஆனால் ரத்தக்களறி எல்லாம் செய்யாமல் சுமாரான வில்லனாகவே வருகின்றனர்.
ஹீரோவாக சமுத்திரகனி,இயக்குநராக தாமிரா,கேமாரா மேனாக விஜய் மில்டன் என மூன்று பேருமே இயக்குநர்கள் இயல்பான கதைக்கு தேவையான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் வரிகள் படத்தின் இடம்,பொருள் பார்த்து பாடலாக்கியுள்ளனர். ஜிப்ரானின் இசையும் அலுப்புத்தட்டவில்லை. ஆனாலும் பாடல்கள் மனதில் பதிய தவறுகிறது.
கார்பரேட் லைஃப் ஸ்டைல் எத்தகைய முட்டாள்தனங்களை நமக்கு ஏற்படுத்துகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் படங்கள் ஏராளம். அந்த ஏராளத்தில் ஆண்தேவதையையும் இணைத்துள்ளார் தாமிரா. ஆனால் பழமை சித்தாந்தம் இருந்தாலும் ‘ஓல்ட் இஸ் கோல்டு’ தான் என்பதற்கு ஏற்ப தான் படம் இருக்கிறது.
ஃபேமிலி ஆடியன்ஸை அனைத்துக்கொள்ளும் இந்த ‘ஆண் தேவதை.’
–ஜெ.ஜெகதீஸ்
(jagadishmedia@gmail.com)